காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரும் மனு: உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரும் மனு: உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுளை நீக்ககோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என மீண்டும் மறுத்து விட்டது. அங்கு நிலைமை சீரடைந்து வருவதால் கால அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கடந்த ஒரு வாரமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு திருத்தப்பட்டதை எதிர்த்தும், கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த புதன் கிழமை இதுதொடர்பான விசாரணையின்போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணையின்போது கூறிய நீதிபதிகள், ‘‘காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தரைவழி தொலைபேசி இணைப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பத்திரிக்கை செய்திகளில் இதனை நாங்களும் பார்த்தோம். எனவே மத்திய அரசுக்கு தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மத்திய அரசுக்கு இன்னமும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றே நாங்கள் எண்ணுகிறோம்’’ எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in