Published : 16 Aug 2019 11:24 AM
Last Updated : 16 Aug 2019 11:24 AM

வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் மரணமடைந்தார். நீண்டகாலம் உடல்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவரது முதலமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு தலைவர்களும் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தி மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாய், மக்களவைக்கு ஒன்பது முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 10-வது பிரதமராகக் கடந்த 1996-ம் ஆண்டில் பொறுப்பேற்ற வாஜ்பாய் அரசின் முதல் பதவிக்காலம் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர், 1998-ம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். ஆனால், இந்தமுறை அவர் பதவியேற்று 13 மாதங்களே பிரதமராக நீடிக்க முடிந்தது.

தொடர்ந்து 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை வாஜ்பாய் அமைத்தார். இதன் மூலம் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத அரசு என்ற பெருமையை வாஜ்பாய் அரசு பெற்றது.

வாஜ்பாய்க்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. பத்மவிபூஷண் விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x