Published : 16 Aug 2019 08:56 AM
Last Updated : 16 Aug 2019 08:56 AM

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடத்தும்  ‘மூடிய அறை’ கூட்டம் 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த முடிவை அடுத்து அதுகுறித்து மூடிய அறையில் இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்றில் விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ஆகஸ்ட் 16, இன்று, இந்திய நேரம் இரவு 7.30 மணியளவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூடிய அறையில் கூட்டம் நடைபெறவிருப்பதாக ஊடக அதிகாரி பார்த்தலோமியே வைபாஸ் என்பவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 14ம் தேதி சீனா இதற்கான வேண்டுகோளை வைத்ததையடுத்து இந்த மூடுண்ட அறை கூட்டத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது. இதில் பாகிஸ்தான் கலந்து கொள்ள முடியாது.

இது அதிகாரபூர்வ கூட்டம் இல்லை என்பதாலும் உள்ளே விவாதிக்கப்படும் விஷயங்கள் ஊடகங்களுக்கு பகிரப்படமாட்டாது என்பதாலும் அங்கு விவாதிக்கப்படும் விவகாரங்கள் பதிவு செய்யப்படாது என்பதாலும் ‘மூடுண்ட அறை’ விவாதம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஊடக அதிகாரி தெரிவித்தார்.

“இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் குறித்து செக்யூரிட்டி கவுன்சிலின் மூடப்பட்ட அறை ஆலோசனைக் கூட்டத்தை நடத்த சீனா சமீபத்தில் கேட்டுக் கொண்டது” என்று பிடிஐ நிறுவனத்திடம் ஐநா தூதர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை இழுத்திருப்பதால் காஷ்மீர் விவகாரத்தில் சீனா பாகிஸ்தான் பக்கம் இருப்பதாக டெல்லியில் தூதர்கள் பலர் அபிப்ராயப்படுகின்றனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுக்குச் சென்று அங்கு அதன் வெளியுறவு அமைச்சர், ஜின்பிங்கிற்கு நெருக்கமான துணை அதிபர் ஆகியோரைச் சந்தித்தும் அதற்கு எந்த ஒரு பயனுமில்லை என்று டெல்லியில் சில தூதர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காஷ்மீர் விவகாரம் குறித்த பாகிஸ்தானிய அணுகுமுறையை அன்று தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, டிவி சேனல் ஒன்றில் கூறும்போது, “அது மனிதம் பற்றிய விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஏதோவொரு துண்டு நிலம் பற்றியதல்ல என்று உலகம் உணர வேண்டும்” என்றது குறிப்பிடத்தக்கது.

(பிடிஐ, ஐஏஎன்எஸ், தகவல்களுடன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x