

புதுடெல்லி
சுதந்திர தின உரையில் இந்தியாவின் தண்ணீர்ப் பிரச்சினை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 95 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய அவர் தண்ணீர்ப் பிரச்சினை குறித்தும் கூறினார்.
அப்போது அவர், ''தண்ணீர்ப் பிரச்சினை நாடு முழுவதும் வளர்ந்துகொண்டே செல்கிறது. இந்தியாவின் பாதி குடும்பங்களில் குடிநீர் வசதி சரியாக இல்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். இதற்காக ரூ.3.5 லட்சம் கோடி செலவில், ஜல் ஜீவன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்தும். இதன்மூலம் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கி, வீட்டுக்கே தண்ணீர் கொண்டு வரப்படும். 70 ஆண்டுகளில் செய்யமுடியாததை, அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம்.
திருவள்ளுவர் இரண்டே வரிகளில் மகத்தான கருத்தைக் கூறியிருக்கிறார். தண்ணீரின் முக்கியத்துவத்தை பல்லாண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார். 'நீரின்றி அமையாது உலகு' என்பதுதான் அது. தண்ணீர் இல்லாமல் இந்த உலகமே இயங்காது'' என்றார் பிரதமர் மோடி.