

சென்னை
கேரள வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழையால் கேரளா முழுவதும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் கண்ணூர், வயநாடு, பத்தனம்திட்டா, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இடர்களுக்கு இதுவரை 95 பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வெள்ள நிவாரண முகாம்களில் 1.89 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக திமுகவினர் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, திமுகவினர் அனுப்பிய ரூ.82 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நேற்று ஸ்டாலின், 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் சென்னையிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்.
நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் அனுப்பி வைத்தபோது
இந்நிலையில், இன்று (ஆக.15) கேரள முதல்வர் பினராயி விஜயன், மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன், "தமிழக சகோதர சகோதரிகளின் அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தமைக்கு நன்றி”, எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் உதவ வேண்டும் என, பினராயி விஜயன் ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.