

புதுடெல்லி
கடந்த 2010-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், விவிஐபிக்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இதில் ம.பி. முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகனும் தொழிலதிபருமான ரத்துல் புரியிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுனில் கவுர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ரத்துல் புரிக்கு முன் ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, ஹெலிகாப்டர் வழக்கு தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கில் ரத்துல் புரியின் பங்கு மற்றும் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.