

பலன்பூர்
குஜராத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியை பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் ஹர்திக் படேல் மற்றும் அக்கட்சியின் 2 எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 1990-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படு விசாரணை நடைபெற்றது. அம்மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பட் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து 2015-ல் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பட்டுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் பலன்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், படேல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான ஹர்திக் படேல், சஞ்சீவ் பட்டை சந்திக்க பலன்பூர் சிறைக்கு நேற்று சென்றார். அவருடன் பலன்பூர், பதான் தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மகேஷ் படேல், கிரித் படேல் மற்றும் கட்சித் தொண்டர்கள் சென்றனர். இவர்கள் அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த தகவலை காவல் கண்காணிப்பாளர் நீரஜ் பட்குஜார் தெரிவித்தார்.