

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, பிஜாப்பூர், பாகல் கோட்டை, ரெய்ச்சூர், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 21 மாவட்
டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணா, பீமா, காவிரி, கபிலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.
தொடர் மழையால் 21 மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி, மக்கள் வசிக்கும் பகுதி
களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் வரலாறு காணாத வகையில் வட கர்நாடக பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் கடலோர கர்நாடகா, மத்திய கர்நாடகா மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக அரசு விடுத்துள்ள அறிக்கையில், கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பெலகாவியில் 12 பேரும், குடகில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா முழுவதும் 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 852 கால்நடைகள் உயிரிழந்
துள்ளன.
இதுவரை பெய்த மழையின் காரணமாக 4.5 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல
கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா, பீமா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய 5 லட்சத்து 81 ஆயிரத்து 897 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வட கர்நாடகாவில் 17 மாவட்டங்களில் 1,181 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 629 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.