

அல்வார், ராஜஸ்தான்
ஏப்ரல் 1, 2017 அன்று 55 வயது பேலு கான் ஜெய்ப்பூர் சந்தையில் பசுக்களை வாங்கிக் கொண்டு தன் சொந்த ஊரான ஹரியாணாவின் நூ மாவட்டத்துக்கு வரும் போது பெரோர் என்ற இடத்தில் பசுக்குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து இவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணித்தார்.
ராஜஸ்தான் போலீஸ் இதனை கொலை வழக்காகப் பதிவு செய்தது. பசுக்கடத்தல் புகாரையும் விசாரித்தது. பேலு கான் மகன்களான இர்ஷத், ஆரிப் ட்ரக் ட்ரைவர் கான் மொகமது ஆகியோர் மீது பசுக்கடத்தல் வழக்குப் போட்டதற்காக அசோக் கெலாட் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் கோர்ட்டில் இதன் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வெளியிட்ட நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவர் சிறார் என்பதால் சிறார் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
அதாவது சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக்கி அவர்களை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்.
செல்போன் கேமராவில் 6 பேர் செயல்களும் பதிவாகியிருந்தாலும் அதனைச் சாட்சியமாக அனுமதிக்க முடியாது என்று ட்ரையல் கோர்ட் கைவிரித்தது.
பேலுகான் தன் முதற்கட்ட வாக்குமூலத்தில் குற்றவாளியின் பெயரைக் கூறவில்லை. இதுதான் சந்தேகத்தின் பலனாக முடிந்ததாக டிபன்ஸ் லாயர் ஷர்மா தெரிவித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகத் தெரிவித்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை காயங்களினால் மரணம் என்று தெரிவித்தது.
இந்த கும்பல் வன்முறையை செல்போனில் படம்பிடித்த நபர் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லவில்லை. வீடியோவும் தெளிவாக இல்லாததால் குற்றவாளியைத் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை என்கிறார் வழக்கறிஞர்.
2017-ல் ராஜஸ்தான் போலீஸ் இந்த 6 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது, ஆனால் கொந்தளிப்பு ஏற்பட கோர்ட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
பேலுகான் வழக்கறிஞர் என்.டி.டிவியின் புலன் விசாரணை வீடியோவை ஆதாரமாகப் பயன்படுத்த அனுமதி கேட்ட போது அல்வார் கோர்ட் மறுத்தது.
முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா, “காங்கிரஸ் இதனை அரசியலாக்கியது. சட்டத்தை கையில் எடுத்தவர்கள் மீது நாங்கள்தான் வழக்கு பதிவு செய்தோம், ஆனால் கோர்ட் இன்று விடுதலை செய்துள்ளது, இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.