

காங்டாக்
சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் மீதமிருந்த 2 எம்எல்ஏக்களும் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவில் இணைந்தனர். இதனால் அந்த கட்சியில் தற்போது சாம்லிங் மட்டுமே ஒரே எம்எல்ஏவாக உள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்தவர் பவன் குமார் சாம்லிங். இவரது தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சி, 1994 தேர்தலில் 19 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
தொடர்ந்து தேர்தல்களில் வென்று 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்தார் சாம்லிங். இந்தநிலையில் கடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது.
32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளிலும், முன்பு ஆளும் கட்சியாக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வென்றன.
சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர்
பிரேம் சிங் தமங் (பிஎஸ் கோலே) முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 2 பேர் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தலா ஓரிடத்தை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த கட்சியின் பலம் 13 ஆக குறைந்தது.
பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் நேற்று திடீரென பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் தங்களை பாஜக-வில் இணைத்துக்கொண்டனர். இதன் மூலம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் சூழல் ஏற்பட்டது.
சிக்கிம் ஜனநாயக முன்னணியில் சாம்லிங் உட்பட 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இந்தநிலையில் சாம்லிங் தவிர மீதமிருந்த 2 எம்எல்ஏக்களும் இன்று ஆளும் கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவில் இணைந்தனர்.
சாம்லிங் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களான ஜி.டி துங்கல் மற்றும் பிரசாத் சர்மா ஆகிய இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் ஆளும் கட்சியான கிரந்திகாரி மோர்ச்சாவில் இணைவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே சாம்லிங் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
சிக்கிம் சட்டப்பேரவையில் அவர்கள் தனி அணியாக இருந்து வந்தனர். தற்போது அவர்கள் ஆளும் கட்சியில் முறைப்படி இணைத்துக் கொண்டனர்.