

ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவர் ஷா ஃபாசல் புதன் கிழமை காலை டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடு செல்வதற்காக வந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலுக்காக தன் ஐஏஎஸ் கல்வி மற்றும் பொறுப்புகளைத் துறந்த ஷா ஃபாசல் ஹார்வர்ட் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார், அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
“அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஹார்வர்ட் செல்வதகா இருந்ததாக” அவரது நண்பர் ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார். ஃபாசல் ஸ்ரீநகரில் மற்ற அரசியல் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஏர்போர்ட் டிசிபி சஞ்சய் பாட்டியா கூறும்போது, “அவர் கைது செய்யப்பட்டதாக எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை” என்று மறுத்தார்.
குடியேற்றத்துறை தரப்பும் ஷா ஃபாஸல் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
நேற்று அவர் தன் ட்விட்டரில், “அரசியல் உரிமைகளைப் பெற பெரிய அளவில் அகிம்சை போராட்டம் தேவை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.