இந்தியா-சீனா உறவுகள் அரசியல், ராஜிய உறவுகளைக் கடந்து பரந்துபட்டது, ஆழமானது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 

இந்தியா-சீனா உறவுகள் அரசியல், ராஜிய உறவுகளைக் கடந்து பரந்துபட்டது, ஆழமானது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 
Updated on
2 min read

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகள் பரஸ்பர கவலைகளை மதிப்பதாகவும் வேறுபாடுகளை நிர்வகிப்பதாகவும் இருக்க வேண்டும், இருதரப்பு உறவுகள் அரசியலைக் கடந்த ஓர் ‘உலகளாவிய பரிமாணங்கள்’ கொண்டது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

திங்களன்று ஜெய்சங்கரின் 3 நாட்கள் பீஜிங் பயணம் முடிவுக்கு வந்தது, இந்தப் பயணத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பரந்துபட்ட பல்வேறு இருதரப்பு உறவுகளையும் இருவரும் பேசியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தில் அதிபர் ஜின்பிங்கிற்கு நெருக்கமான துணை அதிபர் வாங் குயிஷானையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

ஞாயிறன்று சின அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இரண்டு மிகப்பெரிய வளரும் நாடுகள் மற்றும் வளரும் பொருளாதாரமான இந்தியாவும் சீனாவும் நெருங்கிய உறவுகள் கொண்டிருப்பது உலக அளவில் மிக முக்கியமானது என்று ஜெய்சங்கர் தெரிவித்ததாக சினுவா மேற்கோள் காட்டியுள்ளது.

“நம் உறவுகள் இருதரப்பு உறவுகள் என்பதையும் கடந்த மிகப்பெரிய நிலையை எட்டியுள்ளது, இதற்கு உலகளாவிய பரிமாணங்கள் உள்ளன” என்று சினுவா ஜெய்சங்கரை மேற்கோள் காட்டியுள்ளது.

உலகம் அதன் மாறிவரும் ஒழுங்கில் ‘மேலும் பலதுருவ’ பரிமாணம் அடைந்திருப்பதால் இந்தியாவும் சீனாவும் உலக அமைதி, ஸ்திரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய தொடர்புபடுத்தல்களையும் ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றார் ஜெய்சங்கர்.

அவர் மேலும் கூறியதாக வெளியான செய்தியில், இருநாடுகளும் தங்கள் பரஸ்பர முக்கிய அக்கறைகளை மதிக்க வேண்டும், வேறுபாடுகளை நிர்வகிக்க வழிமுறைகளைக் கண்டுபிடித்துக் கொள்ள வெண்டும் இருதரப்பு உறவுகளை ராஜிய அளவுகோல்களை கவனத்தில் நிறுத்திக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இருநாடுகளுக்கும் ஆயிரக்கணக்கு ஆண்டுகளான வரலாற்று பிணைப்பு உள்ளது, கீழைத் தேய நாகரிகங்களில் இந்தியா, சீனா நாகரீகங்கள் மிகவும் ஹ்டொன்மையானவை இரண்டும் தூண்களாகும்.

இந்தியா, சீனா பண்பாடு மற்றும் நாகரீகங்கள் இருநாடுகளையும் எப்படி தாக்கம் செலுத்தின என்பதை இருநாட்டு இளம் சமுதாயத்தினர் இன்னும் உணரவில்லை. ஆகவே பண்பாட்டு பரிமாற்றங்கள் மூலம் இருநாட்டு வரலாறு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியம் உள்ளது. இது இரண்டு நாடுகளின் முக்கியமான கடமையாகும்.

இந்தியாவும் சீனாவும் உயர்மட்ட அளவில் மக்களுக்கிடையேயான பரிமாற்ற முறையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது, இதன் முதல் கூட்டம் புதுடெல்லியில் டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இது போன்ற கூட்டங்கள் இருதரப்பு உறவை குறுகிய ராஜிய புலத்திலிருந்து நகர்த்தி மேலும் பரந்துபட்ட சமூக அளவிலான ஊடாட்டாமாகக் கொண்டு சென்றுள்ளது.

இருநாட்டு மக்களும் முகத்துக்கு முகம் நேரடியாக கலந்துரையாடத் தொடங்கினால் பரஸ்பர உறவாடலில் புதிய அர்த்தம் வளரும். வெகுஜன ஆதரவை கட்டமைப்பது நம் உறவின் முக்கியத்துவமான ஒரு காரியமாகும். நம் இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் நல்ல முறையில் உணர வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசியதாக சினுவா கூறுகிறது.

வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் பதவியேற்ற பிறகு சீனாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். முன்னதாக சீனாவுக்கான இந்திய தூதராக 2009 முதல் 2013 வரை ஜெய்சங்கர் இருந்துள்ளார், இந்தியத் தூதர் அதிக ஆண்டுகள் சீனாவில் பணியாற்றிய வகையில் ஜெய்சங்கர்தான் முதலிடம் வகிக்கிறார்.

அதே போல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேசியபோது, ஜம்மு காஷ்மீர் புதிய முடிவுகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இதனால் சீனாவுடனான எல்லை விவகாரத்தில் எந்த வித தாக்கமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்தியா எந்தவிதமான கூடுதல் எல்லை உரிமைகளையும் கோரவில்லை. ஆகவே சீனா இது குறித்து எழுப்பும் கவலைகள் தேவையற்றது” என்று ஜெய்சங்கர் கூறியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கர் சீனா செல்வதற்கு முன்பாக பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பீஜிங்கிற்கு அவசரம் அவசரமாகச் சென்று வாங் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஜம்மு காஷ்மீர் முடிவுகளை இந்தியா திரும்பப் பெறுவதற்கான தங்கள் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என்ரு கூறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in