

வாகா
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுடனான உறவை துண்டித்து வரும் பாகிஸ்தான், சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு ராணுவம் சார்பில் இந்திய வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.
மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.
இதற்கிடையே பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
இதனால் இருநாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் இருநாட்டு பாதுகாப்பு படை வீரர்களும் பரஸ்பரம் இனிப்பு வழங்குவது வழக்கமான ஒன்று.
ஆனால் தற்போது நட்புறவு மோசமாக உள்ளநிலையில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு ராணுவம் சார்பில் இந்திய வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படவில்லை. இருதரப்பு உறவுகள் சகஜமாக இல்லாத நிலையில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை என பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.