செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 13:04 pm

Updated : : 14 Aug 2019 13:04 pm

 

சோன்பத்ரா மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்: ட்விட்டரில் உ.பி. அரசை விளாசிய பிரியங்கா

people-still-in-fear-priyanka-gandhi

துப்பாக்கிச் சூடு நடந்த உத்தரப் பிரதேச மாநில சோன்பத்ரா மாவட்டத்தின் உம்பா கிராம மக்கள் இன்னமும் அச்சத்தில் வாழ்வதாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கடந்த மாதம் நிலத்தகராறினால் ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். பழங்குடி விவசாயிகள் நிலத்தின் மீது உரிமை கொண்டாடிய மற்றொரு சமூகத்தினர் நடத்திய வன்முறை சம்பவம் அது.

இந்நிலையில், சோன்பத்ராவின் உம்பா கிராமத்துக்கு பிரியங்கா காந்தி நேற்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் சென்றார்.

அது குறித்து அவர் தனது ட்விட்டரில் அடுத்தடுத்து பதிந்த ட்வீட்களில், "உம்பா கிராமத்தில் உள்ள பழங்குடி சகோதர, சகோதரிகளிடம் பேசியதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. அங்குள்ள மக்கள் இன்னமும் அச்சத்தில் வாழ்கிறார்கள். அவர்களின் நிலத்தின் மீதான உரிமை மீட்கப்படும்வரை இந்த அச்ச உணர்வு போகாது. பழங்குடி மக்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபத்தமானது. இதனை ரத்து செய்ய வேண்டும். உம்பா கிராமத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்புக்கு போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். ஆனால், ஒரே ஒரு போலீஸ் சோதனைச் சாவடியைக்கூட நான் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் பிரியங்கா காந்தி சோன்பத்ரா செல்வதற்காக உ.பி.யில் முகாமிட்டிருந்தார். ஆனால், அவரை உ.பி. போலீஸார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பிடிவாதம் காட்டிய அவர் விருந்தினர் மாளிகையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் சோன்பத்ராவின் உம்பா கிராமத்தைச் சேர்ந்த சிலர் பிரியங்காவை விருந்தினர் மாளிகையிலேயே சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பினார். இந்நிலையில், நேற்று அவர் சோன்பத்ராவின் உம்பா கிராமத்திற்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

Priyanka GandhiShonbadraYogi adityanathயோகி ஆதித்யநாத்சோன்பத்ராபிரியங்கா காந்தி

Popular Articles

You May Like

More From This Category

More From this Author