

ஜம்மு
இயல்பு நிலை திரும்பி வருவதால் ஜம்மு பகுதியில் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தின் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு மத்திய அரசு நிறைவேற்றியது.
ஜம்மு காஷ்மீரில் வன்முறைச் சம்வங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். செல்போன், இன்டர்நெட் இணைப்பு துண்டிப்பு, தொலைக்காட்சி இணைப்புகள் துண்டிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், எதையும் ஓர்இரவுக்குள் நடத்திவிட முடியாது, இப்போதைக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜம்மு பகுதியில் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அம்மாநில கூடுதல் காவல்துறை தலைவர் முனிர் கான் கூறுகையில் ‘‘ ஜம்முவில் நிலைமை பெருமளவு சீரடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுதந்திர தினத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்’’ எனக் கூறினார்.