Published : 14 Aug 2019 12:05 PM
Last Updated : 14 Aug 2019 12:05 PM

உங்கள் அழைப்பை ஏற்கிறேன்; எப்போது நான் வரலாம்?- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வி

"உங்கள் அழைப்பை ஏற்கிறேன்; நான் எப்போது காஷ்மீர் வரலாம்?" என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராகுல் காந்தி.

முன்னதாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், "சர்ச்சைகளைக் கிளப்பாமல் காஷ்மீர் வாருங்கள்" என அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் நீண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "உங்களது அழைப்பை ஏற்று நான் ஜம்மு காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன். அங்குள்ள மக்களை எந்த நிபந்தனைகளுமின்றி சந்திக்க விரும்புகிறேன். எப்போது நான் வரலாம்?" என வினவியிருக்கிறார்.

ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னர் ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை கூறியுள்ளார். ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்ப தயாராக உள்ளோம். அந்த விமானத்தில் அவர் காஷ்மீருக்கு வந்து நிலை மையை நேரில் பார்வையிடலாம். மருத்துவமனைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசலாம். காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை. ஒருவர்கூட காயமடையவில்லை. காஷ்மீருக்கு வருவதற்கு ராகுல் தயாரா? " என வினவியிருந்தார்.

அதற்கு ராகுல் காந்தி, "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை வந்து பார்வையிட வேண்டும் என்ற உங்களுடைய அழைப்பை நானும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிக் குழுவும் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், மக்களைச் சந்திப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள். முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி எதிர்க்கட்சி பிரதிநிகள் குழுவினரை அழைத்துவருவதாகக் கூறி இங்கே அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கிறார் என சத்யபால் மாலிக் பேசியிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, "அன்புள்ள மாலிக் அவர்களே, எனது ட்வீட்டுக்கு தங்களது பலமற்ற பதிலைப் பார்த்தேன். உங்களது அழைப்பை ஏற்று நான் ஜம்மு காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன். அங்குள்ள மக்களை எந்த நிபந்தனைகளுமின்றி சந்திக்க விரும்புகிறேன். எப்போது நான் வரலாம்?" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x