

ஹைதராபாத்
காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பு தடை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; விரைவில் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையே நீடிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் தெஹ்சீர் பூனவல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தற்போது இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஹைதராபாத் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
''எந்த தொலைபேசியும் காஷ்மீரில் வேலை செய்யவில்லை. இணையம் என்பது இன்னும் தொலைவில் இருக்கிறது. நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது கூறினேன், ''காஷ்மீர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால்... அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரட்டும்'' என்று.
நீங்கள் ஏன் அவர்களுக்கு தொலைபேசி இணைப்புகளை மீண்டும் இணைக்கக் கூடாது?
காஷ்மீர் மீதான மத்திய அரசின் முடிவு தவறானது. மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது கூட்டாட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. அத்தகைய முடிவை அமல்படுத்துவதற்கு முன்பு மாநில சட்டப்பேரவையின் கருத்துக்களை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் விதி. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை.''
இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.