

பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 80 வட்டங்களில் உள்ள வீடுகள்,விளைநிலங்கள், அரசுக் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தில் 12 பேர் மாயமாகியுள்ள நிலையில், இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று ஷிமோகா மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறி, விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்கள் புதியதாக வீடு கட்டிக்கொள்ள ரூ. 5 லட்சம் வழங்கப்படும். கால்நடை, பயிர்சேதம், உடைமை சேதம் ஆகியவற்றை முறையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்தமாக ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய முதல்கட்டமாக மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரியுள்ளேன். வருகிற 16-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறேன். மத்திய அரசு கர்நாடகாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.