நிலச்சரிவில் மலைபெயர்ந்து சேறு, சகதி, பாறைகளுடன் உருண்டு வந்தபோது இரண்டாகப் பிரிந்தது: இயற்கையின் அதிசயத்தால் உயிர்பிழைத்த குடும்பங்கள்

மலப்புரம் மாவட்டம் காவலபராவில் உள்ள முத்தப்பன்குன்னுவில் நிலச்சரிவு ஏற்பட்டதன் ஒரு வானுயரப்பார்வை.
மலப்புரம் மாவட்டம் காவலபராவில் உள்ள முத்தப்பன்குன்னுவில் நிலச்சரிவு ஏற்பட்டதன் ஒரு வானுயரப்பார்வை.
Updated on
1 min read

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கவலப்பராவில் பெரிய பயங்கர நிலச்சரிவிலிருந்து இயற்கையின் புதிரான, அதிசய மாற்றப் பயணத்தினால் ஒரு குடும்பம் முற்றிலும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 8ம் தேதி இரவு மலப்புரத்தின் கவலப்பராவை உலுக்கிய அதிபயங்கர நிலச்சரிவாகும் அது. மலையின் மேல் தொடங்கிய நிலச்சரிவு கீழ்நோக்கி சேறு-சகதி நீர், பாறைகள் ஆகியவற்றை தள்ளியது, இவை சிற்றோடையாக மாறி கீழ்நோக்கிப் பாய்ந்து வந்தது.

வரும் வழியில் இருக்கும் வீடுகளில் உள்ளவர்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடினர், புகலிடம் தேடி உயிர்ப்பயத்தில் தவித்தனர். ஆனால் இயற்கையின் புதிரான அதிசய வழியோ, கடவுளின் அருளோ தெரியவில்லை, நிலச்சரிவினால் உருவான சிற்றோடை நடுவழியில் இரண்டாகப் பிரிந்து இடையில் சிறு பகுதியை விட்டு விட்டு பிறகு அதைத்தாண்டி இருபிரிவும் ஒன்று சேர்ந்த அதிசயம் நிகழ்ந்ததால் சில குடும்பங்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பின.

அந்தப் பயங்கர இரவிலிருந்து தப்பியவர்கள் தங்கள் அனுபவத்தை கேரள ஊடகம் ஒன்றில் தெரிவிக்கும் போது, நெடியக்கலையில் புஷ்பா தன் கணவர் சுனில் தன் 10 வயது மகன் தனுஷ் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர், “அப்போது பெரிய சப்தம், காதைப்பிளக்கும் சப்தம் கேட்டது. நீர், சேறு, பாறைகள், கற்கள் பாய்ந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. மக்கள் அலறியடித்து ஓடினர். நாங்களும் வெளியே ஓடி வந்தோம் ஆனால் ரொம்ப தூரம் ஓட முடியவில்லை. எங்கள் வீட்டுக்கு அடுத்து ஓடிய நீரோடை பொங்கியது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சேறு பெருகி பாய்ந்து வந்தது, இருட்டாக இருந்ததால் எங்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் எங்கள் வீடு அடித்துச் செல்லப்படாமல் இருந்ததால் வெளியே வந்த நாங்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டோம். முழு இரவும் அங்கேயே இருந்தோம்.” என்றார்.

இவர்களோடு 8 குடும்பங்கள் பிழைத்ததற்குக் காரணம் நிலச்சரிவுப் பாய்ச்சல் இவர்கள் வீடுகளுக்கு வரும் முன் இரண்டாகப் பிரிந்து சென்றது. பிரிந்து சென்றதால் இவர்கள் இருக்கும் பகுதி அடித்துச் செல்லப்படாமல் அப்படியே இருந்து அதிசயமாக இவர்களும் உயிர் பிழைத்தனர். அதன் பிறகு இவர்கள் கவலப்பரா முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தாங்கள் பிழைத்தது ஒரு முழு அதிர்ஷ்டமே என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அண்டை விட்டார்களின் 20 பேர் இதில் மரணமடைந்ததை இவர்கள் துயரத்துடன் நினைவு கூர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in