ஜனநாயக முறையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது: காஷ்மீர் பண்டிட் தலைவர் சுசில் பேட்டி 

ஜனநாயக முறையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது: காஷ்மீர் பண்டிட் தலைவர் சுசில் பேட்டி 
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

கடந்த 1989 முதல் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்து பண்டிட்களுக்கு குரல் கொடுத்து வருபவர் சுசில் பண்டிட். அம் மாநிலத்தை விட்டு வெளியேறி யவர்களில் ஒருவரான இவர், ‘ரூட்ஸ் ஆப் காஷ்மீர் (காஷ்மீரின் வேர்கள்)’ எனும் பெயரில் அவர்கள் நலனுக்காக ஒரு சர்வதேச சமூகநல அமைப்பு துவங்கி நடத்தி வருகிறார். தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்த மத்திய அரசின் செயலுக்கு முழு ஆதரவளிக்கும் சுசிலிடம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிற்காக சில கேள்விகளை முன் வைத்தோம். அவரது பேட்டியில் இருந்து..

காஷ்மீரில் வாழும் சீக்கியர், பண்டிட்டுகள் மற்றும் டோக்ரா ஆகிய சமூகத்தின் 60 பேர் சிறப்பு அந்தஸ்தை அகற்றியது தவறு என நேற்று அறிக்கை அளித்துள்ளார்களே?

இவர்கள் காஷ்மீர் சமூகத்தி னரின் உண்மையான பிரதிநிதிகள் அல்ல. இவர்களில் பலர் டெல்லியிலும் மற்ற இடங்களிலும் பல ஆண்டுகளாக வாழ்பவர்கள். சர்வதேச நாடுகள் உட்பட காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் உண்மையான அச்சமூகத்தினர் சார்பில் ஒரு பதிலறிக்கை வெளியாக உள்ளது.

ஜனநாயக முறைப்படி தான் ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்துகள் அகற்றப்பட் டுள்ளதா?

நிச்சயமாக. இந்த முடிவிற்காக நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மீது அனைத்து மாநில பிரதிநிதி களும் வாக்களித்துள்ளனர். இதில், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை அனுமதியின்றி முடிவு எடுக்கப்பட்ட தாகக் கூறுவதும் தவறு. ஏனெ னில், தெலங்கானாவை தனி மாநில மாகப் பிரிக்க ஆந்திரா சட்டப் பேரவையில் நான்கில் மூன்று பங்கு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதன் பிறகும் நாடாளு மன்ற குரல் வாக்கெடுப்பு மூலம் தெலங்கானா புதிய மாநிலமாக அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக தலைமை யில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸை விடக் கடுமையானத் தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பது குறித்து தங்கள் கருத்து?

மக்களவை தேர்தலுக்கு முன் பாக கடந்த மார்ச்சில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தென்மாநில முதல்வர்களை சந்தித்தார். இதன் பிறகு தங்களுக்கு எதிரான சூழல் தொடர்ந்தால், அனைவரும் இணைந்து தனித் திராவிட நாடு கோர வேண்டியிருக்கும் என அவர் கருத்து கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த செய்திகளின்படி, ஸ்டாலினும் அவரது திமுக கட்சியினரும் எடுக் கும் பாதை மிகவும் ஆபத்தானது. இவர்களுக்கு தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவளிப்பதும் தவறானது. இவர்களில் ஒருவரான வைகோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான எல்.டி.டி.ஈ அமைப் புக்கு ஆதரவளித்து ‘பொடா’ சட்டத்திலும் சிறையில் தள்ளப்பட்டது நினைவிருக்கும்.

லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக்கியதில் உங்கள் சமூகத்தினர் கருத்து என்ன? லடாக்வாசிகளுக்கும், காஷ்மீரிகளுக்கு இடையே நிலவும் முக்கிய பிரச்சினை என்ன?

கூர்கா நிலப்பகுதியினருக்கு தனியாகக் கிடைத்தது போல், லடாக் தன்னாட்சி மலைப்பகுதி வளர்ச்சிக் கவுன்சில் என 1995-ல் மத்திய அரசால் தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் தனியாகப் பிரிந்து வரவிரும்பியது. இதனால்தான் அது யூனியன் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு காஷ்மீரிகள் மீது லடாக் கினருக்கு வெறுப்பு வளர முக்கியக் காரணம் உள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர் செய்தது போல், தனிப்பகுதியான லடாக்கை மாற்றி அதன் மீது மற்றொரு தனிப்பகுதி யான காஷ்மீர் ஒரு காலனி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

தற்போது நாட்டின் இதர மாநிலங்களை போல் ஜம்மு-காஷ்மீரும் மாறிவிட்டதால் அங்கிருந்து வெளியேறிய உங்கள் சமூகத்தினர் தம் தாய்மண்ணுக்கு திரும்புவார்களா?

இப்போது தனி மாநிலம் என்பது வெறும் காகிதங்களில் இயற்றப்பட்டுள்ளது. இது உண் மையாக மாறுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். இந்த பணி முழுமைபெற்றவுடன் கண்டிப்பாக பண்டிட்கள் தம் தாய் மண்ணிற்கு திரும்புவார்கள்.

சிறப்பு அந்தஸ்து அகற்றப் பட்டதற்கு காஷ்மீர்வாசிகள் ஆதரவு உள்ளது என்பது உண்மை எனில், இன்னும் கூட பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? அரசியல்வாதிகள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது ஏன்?

இவை தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். இதன் பலனாக கடந்த ஒருவாரத்தில் காஷ்மீரில் எந்த ஒரு இடத்திலும் கலவரம் நடை பெறவில்லை. இந்த அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட சிலர் அங்கு செல்ல விரும்புகின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு தடை விதிப்பதில் தவறு இல்லையே.

இந்த மாற்றத்தால் மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் என்ன வாகும்?

இனி தேர்தலும் நடக்கும், அரசும் அமையும். ஆனால், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு மட்டும் முன்பு போல் மாநில அரசிடம் இல்லா மல் மத்திய அரசிடம் இருக்கும். உண்மையிலேயே பொதுமக்க ளுக்கு சேவை செய்யும் அரசியல் கட்சிகளுக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in