சிக்கிமில் திடீர் திருப்பம்: பாஜகவில் இணைந்த 10 எஸ்டிஎப் எம்எல்ஏக்கள்

சிக்கிமில் திடீர் திருப்பம்: பாஜகவில் இணைந்த 10 எஸ்டிஎப் எம்எல்ஏக்கள்
Updated on
1 min read

புதுடெல்லி

சிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎப்) கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் 32 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடை பெற்ற சிக்கிம் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

எஸ்டிஎப் கட்சி 15 இடங்களைப் பிடித்தது. இதில் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்ட னர். இந்நிலையில் எஸ்டிஎப் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் நேற்று டெல்லியில் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து கட்சியில் இணைந்தனர். அப்போது கட்சியின் பொதுச் செயலர் ராம் மாதவ் உடனிருந்தார்.

அப்போது ராம் மாதவ் கூறும்போது, “சிக்கிமில் எஸ்டிஎப் கட்சிக்கு 13 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஒரு கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் எண்ணிக் கையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் கட்சி தாவும்போது அவர்களின் பதவி பறிக்கப்படாது.

தற்போது 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் வலுவுள்ள கட்சியாக அங்கு பாஜக செயல்படும். சிக்கிமில் பாஜகவின் வளர்ச் சிக்கு இது உதவியாக இருக்கும்” என்றார்.

எஸ்டிஎப் கட்சியின் தலைவராக இருக்கும் பவன் குமார் சாம்லிங் கடந்த 25 ஆண்டுகளாக சிக்கிமின் முதல்வராக இருந்தார். மேலும் நாட்டில் நீண்ட நாட்களாக தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார். ஆனால் கடந்த பேரவைத் தேர்தலில் அவரது கட்சி தோல்வி கண்டது.

இதனிடையே, பாஜகவில் இணைந்த எம்எல்ஏ டோர்ஜி ஷெரிங் லெப்சா கூறும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளைப் பார்த்து நான் பாஜகவில் இணைந்துள்ளேன். வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைய அவர் உதவுவார் என்று நம்புகிறேன். பின்தங்கிய சிக்கிம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறோம்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் நாங்கள் பின்தங்கியுள்ளோம்.

சிக்கிமில் தாமரை மலரவேண்டும் (பாஜக ஆட்சி) என்று நாங்கள் விரும்புகிறோம். இங்கு தாமரை மலர்ந்தால் எங்கள் மாநிலமும் முன்னேறிய மாநிலமாகி விடும்” என்றார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in