

லக்னோ
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விதம் மிகவும் கவலைக்குரியது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்புச் சலுகைகளை வழங்கும் 370, 35ஏ ஆகிய பிரிவுகளை திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அறிவித்தது.
மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் விமர்சித்தனர், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துச் செயல்படுகின்றனர்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்தநிலையில் இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஒரு கும்பலால் கிராம மக்கள் 10 சுட்டுக்கொல்லப்பட்ட சோனாபத்ராவுக்கு இன்று சென்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி வதேரா கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விதம் மிகவும் கவலைக்குரியது. இது முழுக்க முழுக்க ஜனநாயகத்துக்கு விரோதமானது.
ஜனநாயகத்தின் அடிப்படை தன்மையையே மத்திய அரசு தகர்த்து விட்டது. இதுபோன்ற முக்கிய முடிவை எடுக்கும்போது கட்டாயம் விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்.
ஆனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
இவ்வாறு அவர் கூறினார்.