Published : 13 Aug 2019 04:25 PM
Last Updated : 13 Aug 2019 04:25 PM

ஜம்மு காஷ்மீரில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் 'காஷ்மீர் டைம்ஸ்' ஆசிரியர் மனு

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி 'காஷ்மீர் டைம்ஸ்' நாளேட்டின் ஆசிரியர் அனுராதா பாஷின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கடந்த ஒரு வாரமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெளியாகி வரும் 'காஷ்மீர் டைம்ஸ்' நாளேட்டின் ஆசிரியர் அனுராதா பாஷின் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விரிந்தா குரோவர் ஆஜராகினார்.

வழக்கறிஞர் குரோவர் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவிடம் நாளேட்டின் ஆசிரியரை அறிமுகம் செய்துவைத்து, மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத சூழல் இருக்கிறது என்று தெரிவித்தார்

இதைக் கேட்ட நீதிபத மிஸ்ரா, " இந்த மனுவை பதிவாளரிடம் அளியுங்கள், அவர் பரீசிலிப்பார்" என்றார்.

காஷ்மீர் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் தாக்கல் செய்த மனுவில், " ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 4-ம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்கள் எந்தவிதமான தகவல் தொடர்பும் இன்றி இருக்கின்றன. இணைய சேவை, லேண்ட்லைன் தொலைபேசி சேவை, செல்போன் சேவை என முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளால் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று செய்தி சேகரிக்க முடியவில்லை.

எந்தவிதமான முறையான உத்தரவும் இன்றி, இதுபோன்ற தகவல் தொடர்புகள் மத்திய அரசாலும், மாநில அரசாலும் முடக்கப்பட்டுள்ளன. அதிகாரமும், சக்தியும், தன்னிச்சையான செயல்பாடும் யார் உத்தரவின் பெயரில் நடக்கிறது என்பதும் தெரியவில்லை.

பத்திரிகையாளர்கள் தங்களிடம் வைத்துள்ள அடையாள அட்டையின் மூலம் எந்த இடத்திலும் செய்தி சேகரிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 6-ம் தேதியில் இருந்து நாளேடுகள் அச்சடிக்கப்படவில்லை.

ஆதலால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x