

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்று மத்திய அரசுக்கு எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் உணர்வுப்பூர்வமானது, கவனமாகக் கையாள வேண்டும், மத்திய அரசுக்கும் இந்த விஷயத்தில் போதுமான காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தின் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு மத்திய அரசு நிறைவேற்றியது.
ஜம்மு காஷ்மீரில் வன்முறைச் சம்வங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். செல்போன், இன்டர்நெட் இணைப்பு துண்டிப்பு, தொலைக்காட்சி இணைப்புகள் துண்டிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
" ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகைளை ரத்துச் செய்யும் விதமாக அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த நிகழ்வுக்காக அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள், இன்டர்நெட் முடக்கம், செல்போன் இணைப்பு துண்டிப்பு, செய்திச் சேனல்கள் முடக்கம் போன்றவை நடைமுறையில் உள்ளன. மக்கள் அடிப்படை வசதிகளான மருத்துவ வசதி, வங்கிச் சேவை, பள்ளிக்கூடம் செல்லுதல், அரசு அலுவலங்களுக்கு செல்லுதல், காய்கறிகள், உணவுப்பொருட்கள் என எதுவுமே கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நீதி ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரவழக்காக விசாரிகக்கோரி பூனாவாலா கோரியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அஜஸ் ரஸ்தோகி ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜராகி வாதாடினார் அவர் வாதிடுகையில், " ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்கூட தங்களின் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. தீபாவளி திருநாள் அன்று கூட குடும்பத்தாருடன் பேசமுடியாது என்றால் நினைத்துப்பாருங்கள்" என்றார்.
அதற்கு அரசு சார்பில் ஆஜராகிய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிடுகையில், " ஊரடங்கு உத்தரவை நீக்குவது, தகவல்தொடர்பை இயல்புக்கு கொண்டுவருவது அனைத்தும் அரசின் உத்தரவைப் பொறுத்தது. கட்டுப்பாடுகள் நாள்தோறும் தளர்த்தப்படுகின்றன களச்சூழல் நாள்தோறும் கண்காணிக்கப்படுகிறது
2016-ம் ஆண்டு தீவிரவாதி புர்ஹான் வானி ராணுவத்தினரால் கொல்லப்பட்டபின் காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையால், 40 பேர் கொல்லப்பட்டார்கள். அங்கு சூழல் இயல்புநிலைக்கு திரும்ப நீண்டகாலம் ஆனது.
ஆனால்,இப்போதுள்ள சூழல் விரைவில் சீராகும். மாநிலத்தில் இயல்புநிலையை கொண்டுவர அரசு உறுதி செய்துள்ளது. எந்தவிதமான உயிர்பலியும் ஏற்படாமல் கட்டுக்குள் இருக்கிறது. எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
மாநிலத்தின் நலனுக்காகவும், இயல்பு நிலை திரும்பவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு அசவுகரியக் குறைவுகளை ஏற்படுத்தலாம் " எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி ஷா, வழக்கறிஞர் மேனகா குருசாமியிடம், " அடுத்து என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. சிறிதுகாலம் அவகாசம் வழங்க வேண்டியது இருக்கிறது. சிலநேரங்களில் நாளைகூட ஏதும் நடக்கலாம், யாரை நாம் குறைசொல்வது. மத்திய அரசையா, யாரும் ஒருபங்குகூட வாய்ப்பு எடுக்கமாட்டார்கள்.
எதையும் ஓர்இரவுக்குள் நடத்திவிட முடியாது. காஷ்மீர் விவகாரம் தீவிரமான, உணர்வுப்பூர்வமான விஷயம். இயல்புநிலை வரும், எதிர்பார்ப்போம். எந்தவிதமான உயிரிழப்பும் நடக்காமல் நாம் உறுதி செய்ய வேண்டும். இதுதான் முக்கியம். இப்போது நீதிமன்றம் தலையிட்டால் அது சிக்கலாகிவிடும் " எனத் தெரிவித்தார்.
சொலிசி்டடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், " மாவட்ட வாரியாக ஊடரடங்கு உத்தரவை ஆட்சியர்கள் கண்காணித்து வருகிறார்கள். சூழலை அறிந்துதான் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அப்போது மனுதாரரிடம் பேசிய நீதிபதி மிஸ்ரா, " சிறிதுகாலம் பொறுமையாக இருங்கள். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப குறிப்பிட்ட காலஅவகாசம் அரசுக்கு வழங்க வேண்டும். ஒருவேளை இயல்புநிலை வராவிட்டால் முழுமையான விவரங்களுடன் வாருங்கள் " எனக் கூறி எந்தவித உத்தரவும் பிறப்பிக்க மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு 2 வாரங்களுக்குப்பின் மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.