Published : 13 Aug 2019 02:15 PM
Last Updated : 13 Aug 2019 02:40 PM
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு நான் வருகிறேன். ஆளுநரின் விமானம் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்தியஅரசு ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை திரும்பப் பெற்றது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு தலைவர்களும் மத்திய அரசின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக், ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், ''ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பக்ரீத் பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் சந்தைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
காஷ்மீர் முழுவதும் திங்கள்கிழமை பக்ரீத் மிகவும் அமைதியாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளைக் கூறியுள்ளார்.
ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளோம். அந்த விமானத்தில் அவர் காஷ்மீருக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிடலாம். மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் பேசலாம். காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை. ஒருவர் கூட காயமடையவில்லை. காஷ்மீர் வருவதற்கு ராகுல் தயாரா? " எனக் கேட்டிருந்தார்.
ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அழைப்பை ஏற்று ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "அன்புள்ள ஆளுநர் மாலிக், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலரை நான் அழைத்துக்கொண்டு, உங்களின் அன்பான வரவேற்பை ஏற்று நான் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு வருவேன்.
எங்களுக்கு எந்தவிதமான விமான சேவையும் தேவைப்படாது. ஆனால், நாங்கள் சுதந்திரமாகப் பயணிக்க, மக்களைச் சந்திக்க, மாநிலத்தில் உள்ள அரசிய ல்கட்சித் தலைவர்களையும், நமது வீரர்களையும் சந்திக்கத் தடை இல்லாத சூழலை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ