

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டிஸ்கவரி சேனலின் மேன் வேர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சி நேற்று (ஆக.12) ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் கலந்துரையாடிய விஷயங்கள் பற்றிய தொகுப்பு இது.
உத்தரகாண்ட் ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் நடந்த அந்த சாகசப் பயணத்தில் தொகுப்பாளர் பிர் க்ரில்ஸின் பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் மோடி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. என் வாழ்வில் நான் பதற்றமே அடைந்ததில்லை. அதனால் பயம், பதற்றம் உணர்வுகள் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. அதனால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவுரையை என்னால் சொல்ல இயலவில்லை. ஆனால், நான் நேர்மறையான சிந்தனை கொண்டவன். எல்லாவற்றிலும் நேர்மறையான பார்வையுடன் இருப்பேன். அதன் காரணமாகவே நான் எப்போதும் ஏமாற்றமடைந்தது இல்லை.
எனது கனவுகள் எப்போதுமே மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. தேசத்தின் வளர்ச்சியில்தான் எனது கவனம் இருக்கும்.
இந்தக் கால இளைஞர்களுக்கு நான் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது வாழ்வை பகுதி பகுதியாக பிரித்துப் பார்க்கக் கூடாது. வாழ்க்கையை முழுமையாகப் பாருங்கள். எப்போதாவது கீழே இறங்கினால் அதை நினைத்து வருந்தாதீர்கள். உண்மையிலேயே அங்கிருந்துதான் பயணம் தொடங்குகிறது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
சிறுவயதில் எப்போதாவது பிரதமராக வேண்டும் என விரும்பினாரா என்ற கேள்விக்கு, "எனது எண்ணம் எப்போதும் தேசத்தின் வளர்ச்சி மீது மட்டுமே இருந்தது. குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள் இருந்தேன். அந்தப் பயணம் எனக்குப் புதிதாக இருந்தது. அப்போது இந்த தேசம் என்னை பிரதமர் பதவிக்கு விரும்பியது. அதனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறேன். இந்த வேலை எனக்கு மனநிறைவைத் தருகிறது.
இன்று உங்களுடன் இந்த வனத்தில் சுற்றுவதுதான் கடந்த 18 ஆண்டுகளில் நான் எடுத்த முதல் விடுமுறை என்பேன். நான் அன்று முதல்வராக இருந்தபோதும் சரி, இன்று பிரதமராக இருக்கும்போதும் சரி எனது பொறுப்புகள் மட்டுமே என் கண் முன் நிற்கின்றன. எனது பதவி, அந்தஸ்து என் புத்தியில் எப்போதுமே ஏறியதில்லை" என்று பிரதமர் கூறினார்.
தனது பால்ய பருவத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, "என் இளமைப் பருவத்தில் எனது குடும்பத்தில் வறுமை நிலவியது. என் வீட்டில் பணக் கஷ்டம் நிலவியபோதுகூட எனது தந்தை ஊரில் மழை பெய்யும் செய்தியை உறவினர்களுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி அதன் மூலம் தெரிவிப்பார். அந்த வகையில் என் இளம் பருவத்திலிருந்தே இயற்கையோடு இயைந்த வாழ்வையே நான் வாழ்ந்திருக்கிறேன்.
இயற்கையைப் பார்த்து எப்போதும் அஞ்சக்கூடாது. எப்போது நாம் இயற்கையுடன் மோதலில் இருக்கிறோம் என நினைக்கிறோமோ அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. எனது கையில் நீங்கள் ஓர் ஈட்டியைக் கொடுத்துள்ளீர்கள். புலிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எனக் கூறுகிறீர்கள். ஆனால், எந்த விலங்கையும் கொல்வது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. கடவுள் எல்லாவற்றையும் எல்லோரையும் காப்பார். இந்த நிகழ்ச்சிக்காக நான் இந்த ஈட்டியைக் கையில் வைத்துக் கொள்கிறேன்" என்றார்.