

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருக்கும் போனியார் பகுதி உரி நிலை அருகே நேற்று காலை தீவிரவாதிகள் நுழைய முயன்றனர்.
அவர்களை பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்ட போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் போலீஸார் கூறினர்.
இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிடாதபடி, கூடுதல் படைகள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஊடுருவல் சம்பவம் இந்த ஆண்டில் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற முதல் ஊடுருவல் முயற்சி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த நான்கு ஊடுருவல் சம்பவங்களை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்த முறியடிப்பு நடவடிக்கைகளில் 10 தீவிரவாதிகளும் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.