Published : 13 Aug 2019 10:56 AM
Last Updated : 13 Aug 2019 10:56 AM

சுதந்திர தினம் அன்று ஸ்ரீநகரில் கொடியேற்றுகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

ஸ்ரீநகர்

வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக் கொடி ஏற்றுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதி செய்தாலும், காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து ஏதும் தகவல் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆனால், அமித் ஷா வருகைக்காக ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

காஷ்மீர் பகுதியில் அசம்பாவிதங்கள், போராட்டங்கள், ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ஊரடங்கு உத்தரவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் மக்களுக்கு போலீஸார் விதித்துள்ளனர்.

வரும் 15-ம் தேதி சுதந்திரம் தின விழா எந்தவிதமான சிக்கலின்றி கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், சுதந்திர தினம் அன்று ஸ்ரீநகருக்குச் செல்லும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்குள்ள வர்த்தக பகுதியான லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏற்ற உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதுமிகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின் முதன்முதலாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்று தேசியக் கொடியேற்ற உள்ளார். ஆனால், இந்தத் தகவலை ஸ்ரீநகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம் உறுதி செய்யவில்லை.

ஆனால் புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலக வட்டாரங்கள் வரும் 15-ம் தேதி ஸ்ரீகநர் செல்கிறார் என்றும் அங்கு கொடியை ஏற்றி வைக்கிறார் எனும் செய்தியை உறுதி செய்கின்றன. ஆனால், சரியான நேரம், பயணம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு பிரச்சினைகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் போன்றவற்றால் உள்துறை அமைச்சர் எப்போது ஸ்ரீநகர் செல்வார் என்பதை உறுதியாகக் கூற முடியாது. இது ரகசியமாக வைக்கப்படும் " எனத் தெரிவித்தார்.

வழக்கமாக உள்துறை அமைச்சர் எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானத்தில்தான் பயணிப்பார். இந்தத் தகவலும் கடைசி நேரத்தில்தான் பகிரப்படும். பாஜக தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அமித் ஷாவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவரின் ஸ்ரீநகர் பயணம் மிகவும் ரகசியமாகவும், கடைசி நேரத்தில் மட்டுமே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஸ்ரீகரில் உள்ள லால் சவுக் பகுதி என்பது குறிப்பிடத்தகுந்த வர்த்தகப் பகுதியாகும். இங்கு கடந்த 1992-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன், நரேந்திர மோடி உடன் சென்று தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் கடும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் இது நடந்தது. அதேபோன்ற நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். கடந்த 1948-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு தேசியக்கொடியை ஏற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

, ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x