

யாகூப் மேமனின் மரண தண்டனை குறித்து கருத்துகளை வெளியிட்ட நடிகர் சல்மான் கான், சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்த நிலையில், அந்தக் கருத்துகளை நீக்கிவிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
'1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு' வழக்கு குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இம்மாதம் 30-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் யாகூப் மேமன் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின.
"டைகர் மேமனைப் பிடித்துத் தூக்கிலிடுங்கள். அவருக்கு பதிலாக அவரது சகோதரருக்கு தண்டனை வழங்காதீர்கள். ஒரு அப்பாவியை கொல்வது ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் கொல்வதற்கு சமம்" என்கிற ரீதியில் சல்மான் கான் கருத்துகளைப் பதிவு செய்தியிருந்தார்.
சல்மான் கானில் இந்தக் கருத்துகளால் ட்விட்டரில் விவாதமும் சர்ச்சைகளும் வெடித்தன. சல்மான் கான் நீதித்துறையை அவமதிப்பதாக பலரும் கருத்து வெளியிட்டனர். சல்மான் கான் தெரிவித்த கருத்துகளுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக, அந்த சர்ச்சைக்குரிய ட்வீட்களை நீக்கிய சல்மான் புதிய விளக்கத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார்.
அதில், "டைகர் மேமன் தனது குற்றங்களுக்காக தூக்கிலடப்பட வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தேன். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்காக அவரது யாகூப் மேமன் தூக்கிலடப்படக் கூடாது என்றும் கூறியிருந்தேன்.
யாகூப் மேமனை அப்பாவி என்று நான் சொல்லவில்லை. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நான் முன்பு இட்ட பதிவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடிய தன்மை உடையது என்பதால் அவற்றை அழித்துவிட வேண்டும் என்று என்னை என் தந்தை கேட்டுக்கொண்டார். அதன்படி, அந்த ட்வீட் கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற காரணத்தினால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அந்தக் கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்.
அதேநேரத்தில், என்னுடைய ட்விட்டர் பதிவுகள், மதத்துக்கு எதிரானவை என்று சொல்பவர்களைக் கடுமையாகக் கண்டிருக்கிறேன். எல்லா மத நம்பிக்கைகளையும் நான் எப்போதும் மதிப்பவன்" என்று சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்புகளில் பல உயிர்களை நாம் இழந்தோம். ஓர் அப்பாவியின் உயிரைப் பறிப்பது என்பது ஒட்டுமொத்த மனிதத்துக்கும் இழப்பு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்" என்றார் சல்மான் கான்.