

பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்தது. இதனால் பெலகாவி, சிக்கோடி, குல்பர்கா உள்ளிட்ட வட கர்நாடக மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்குள்ள நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏரி, குளம், அணைகள் நிரம்பி வழிந்தன.
வீடுகளில் மழை நீர் புகுந்த நிலையில், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம, மாவட்ட சாலைகள் மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வெள்ளம் ஓடியதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
இந்நிலையில் மங்களூரு, உடுப்பி, தென் கன்னடா உள்ளிட்ட கடலோர கர்நாடக மாவட்டங்களிலும், குடகு, ஷிமோகா, சிக்கமகளூரு உள்ளிட்ட மலநாடு கர்நாடக பகுதிகளிலும் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் விடிய விடிய கொட்டித்தீர்க்கும் கனமழையால் காவிரி, ஹேமாவதி, ஹாரங்கி, துங்கபத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மலநாடு கர்நாடக பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், சிருங்கேரி, மடிகேரி, சுள்ளியா உள்ளிட்ட இடங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா 4-ம் நாளாக நேற்று மைசூரு, நஞ்சன்கூடு, ஹுன்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது எடியூரப்பா கூறுகையில், “கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் வரலாறு காணாத வகையில் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தின் அளவை முழுமையாக கணக்கிடுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. ஆரம்பக்கட்ட ஆய்வில் ரூ. 30 ஆயிரம் கோடி வரையிலான சேதம் ஏற் பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 14 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகாவில் 17 மாவட்டங்கள் முற்றிலு மாக மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. இதில் 2,028 கிராமங்கள் முற்றி லுமாக உருக்குலைந்துள்ளன. 5 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 702 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ள 1,168 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு முதல்கட்ட வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும்” என்றார்.