பாலியல் வழக்குகளை விசாரிக்க உருவாக்கப்பட்ட ஆயிரம் சிறப்பு நீதிமன்றங்கள் அக்.2 முதல் செயல்படும்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காகவே சிறப்பாக அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சகம் ரூ.767.25 கோடி மதிப்பில் ஆயிரத்து 23 சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கத் திட்டமிட்டது. இந்த நீதிமன்றம் நாட்டில் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் பாலியல் வழக்குகளை மட்டும் விசாரித்துத் தீர்வு காணும். இந்த நீதிமன்றம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதி ரூ.474 கோடி நிர்பயா நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

கடந்த 8-ம் தேதி அமைச்சரவைச் செயலாளருக்கு நீதித்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில், "கடந்த ஜூலை 11-ம் தேதி செலவீனங்களுக்கான நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதலில், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதோடு தொடர்புடைய மற்ற நடவடிக்கைகளுக்கு விரைவு நீதிமன்றம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 9 மாநிலங்களில் 777 நீதிமன்றங்கள் முதல் கட்டமாகவும், 2-வது கட்டத்தில் 246 நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளன எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டமான போக்ஸோ சட்டத்தில், மத்திய அரசு கொண்டு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in