Published : 12 Aug 2019 04:29 PM
Last Updated : 12 Aug 2019 04:29 PM

ப.சிதம்பரத்தின் கருத்து பொறுப்பற்றது, வகுப்புவாதத்தை தூண்டும்: பாஜக கடும் கண்டனம் 

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் கருத்து பொறுப்பற்றது, வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலானது என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு சலுகைகளை வழங்கும் 370, 35ஏ ஆகிய பிரிவுகளை திரும்பப் பெற்றது.மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அறிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. நாடாளுமன்றத்திலும் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் கண்டித்து சென்னையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலமாக இருந்திருந்தால், நிச்சயம் பாஜக இதுபோன்ற சிறப்புச் சலுகைகளை ரத்து செய்து இருக்காது. அந்தபிராந்தியத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால்தான் இந்த காரியத்தை செய்துள்ளது" எனப் பேசினார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி, மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், " முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜம்மு காஷ்மீர் குறித்த அவரின் கருத்து பொறுப்பற்றது, வகுப்புவாதத்தை தூண்டுவிடும் கருத்து. மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நலனுக்காகவும், அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும்தான். நாங்கள் செய்ததில் உண்மைத்தன்மை இல்லாவிட்டால், கடந்த பல ஆண்டுகளாக 42 ஆயிரம் முஸ்லிம்கள் வன்முறையில் எப்படி இறந்தார்கள் " எனக் கண்டித்துள்ளார்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், " காங்கிரஸ் கட்சி அரைநூற்றுக்காண்டுக்கு முன் செய்த தவற்றை இப்போதுள்ள பாஜக தலைமையிலான அரசு திருத்தியுள்ளது. ஆனால், ப.சிதம்பரம் என்ன சொல்கிறார், நாங்கள் செய்த செயலுக்கு வகுப்புவாத சாயம் பூசுகிறார். எங்களின் இந்த செயல் தேச நலனுக்கானது" எனத் தெரிவித்தார்.

மத்தியப்பிரதே முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் நிருபர்களிடம் கூறுகையில், " காங்கிரஸ் கட்சியின் குறுகிய புத்தியைத்தான் ப.சிதம்பரம் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ப.சிதம்பரம் இந்து முஸ்லிம் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்" எனக் கண்டித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x