

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் அமோனியா கசிவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 74 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேவலக்குண்டா கிராமத்தில் திங்கள் காலை 6.30 மணிக்கு கண்டெய்னர் ஒன்றிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டது.
உதவி கமிஷனர் ஹெப்சிபா ராணி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “மால்ப்பிரெஷ் மரைன் தொழிற்சாலையில் கண்டெய்னர் ஒன்றின் பைப்பிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 74 பேர்களில் 2 பேர் தீவிர கண்காணிப்புச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மற்றவர்கள் அபாயக் கட்டத்தைக் கடந்து விட்டனர்” என்றார்.
தொழிற்சாலை வளாகத்தில் சுமார் 350 பேர் இருந்துள்ளனர். கசிவு செய்தி கிடைத்தவுடன் தீயணைப்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இவர்கள் பைப்பின் வால்வை ஸ்விட்ச் ஆஃப் செய்ததையடுத்து பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, இதுதொடர்பாக மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உதவி ஆணையர் தெரிவித்தார்.