Published : 12 Aug 2019 02:28 PM
Last Updated : 12 Aug 2019 02:28 PM

தந்தையுடன் பாஜகவில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் 

காமென்வெல்த் போட்டிகளில் தேசத்துக்காக பதக்கங்களைக் குவித்த மல்யுத்த வீராங்கனை, பபிதா போகத் தனது தந்தை மஹாவீர் போகத்துடன் இன்று (திங்கள்கிழமை) பாஜகவில் இணைந்தார்.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா மாநிலம் இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பிரபல முகமான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், அவரது தந்தை மஹாவீர் போகத் ஆகியோர் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஹரியாணாவில் தற்போது பாஜக ஆட்சியே நடக்கிறது. இருந்தாலும், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தலை சந்திக்கவுள்ளதால் கட்சியில் இத்தகைய பிரபலங்களைச் சேர்ப்பது தங்களுக்கு பலம் சேர்க்கும் என மாநில பாஜக கருதுகிறது.

அதனால், பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் இந்த இணைப்பு நடந்தது. இணைப்புக்குப் பின்னர் பபிதா போகத்தும், மஹாவீர் போகத்தும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மோடியின் விசிறி நான்..

ஹரியாணா பாஜக அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பபிதா, "நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி. 2014-ல் இருந்து அவரின் தீவிர ரசிகையாக இருக்கிறேன். அவர் இத்தேசத்திற்காக நிறைய சேவை செய்திருக்கிறார். விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் பாஜகவில் இணைவது தள்ளிப்போனது. இதோ இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து வரலாற்றை தங்க வரிகளால் பாஜக எழுதியுள்ளது. இத்தருணத்தில் கட்சியில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த வேளையில், என்னைப் போலவே பலரும் பாஜகவில் இணைய விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

மேலும் அண்மையில் காஷ்மீரிலிருந்து இனி பெண் எடுக்கலாம் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டாரை ஆதரித்து பபிதா பேசினார். "ஹரியாணா மாநிலத்தில் குறைந்துவரும் பாலின விகிதாச்சாரத்தைப் பற்றி பேசும்போதே முதல்வர் ஆண் - பெண் விகிதத்தை அதிகரிக்க இனி காஷ்மீரில் இருந்தும் பெண் எடுக்கலாம் என்று கூறினார். நம் காஷ்மீரின் மகள்களையும் சகோதரிகளையும் அவமதிக்கும் வகையில் அவர் ஏதும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவரின் கருத்துகளைத் திரித்துவிட்டன" என்றார்.

தொடர்ந்து பேசிய மஹாவீர் போகத், "பிரதமர் மோடியை நான் எப்போதுமே வியப்புடன் பார்த்திருக்கிறேன். புல்வாமா தாக்குதலில் பாஜக கொடுத்த பதிலடி என்னை வெகுவாக ஈர்த்தது. இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை ரத்து செய்து இன்னொரு மைல்கல்லை பாஜக எட்டியுள்ளது. இந்த வேளையில் இந்த பெரும் குடும்பத்தில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. அரசியலிலும் யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்" என்றார்.

மீண்டும் விளையாட வேண்டும்..

இணைப்பு விழாவில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "பபிதா போகத் இந்நாட்டின் இளைஞர்களுக்கு ஓர் உந்து சக்தி. அவர் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. கட்சியில் இணைந்தாலும்கூட அவர் விரும்பினால் மீண்டும் அவர் விளையாட்டில் முன்னுதாரணமாக செயல்பட ஒரு விளையாட்டு அமைச்சராக எனது கடமைகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று பேசினார்.

டங்கல் கொண்டாடிய போகத் சகோதரிகள்..

கடந்த 2016-ம் ஆண்டு ஆமீர்கான் நடித்த டங்கல் படத்தின் கருவே பபிபதா, கீதா போகத் சகோதரிகளும் அவரது தந்தை மஹாவீர் போகத்தும்தான். ஹரியாணாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஆணாதிக்கம் நிறைந்த ஒரு விளையாட்டில் எப்படி தனது இரண்டும் மகள்களையும் சாதனை மங்கைகளாக ஒரு தந்தை மாற்றுகிறார் என்பதையே அந்தப் படம் கொண்டாடியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x