Published : 12 Aug 2019 01:42 PM
Last Updated : 12 Aug 2019 01:42 PM

நின்று யோசிப்பதற்கு நேரமில்லை; என் கடமையைச் செய்தேன்: பாராட்டுகளைப் பொருட்படுத்தாத குஜராத் காவலர் பேட்டி

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிச் சிறுமிகள் இருவரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் தனது தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர் பிரித்விராஜ் சிங் ஜடேஜாவுக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், அவற்றைப் பொருட்படுத்தாமல் "நான் என் கடமையையே செய்தேன்" என எளிமையுடன் கூறியிருக்கிறார்.

துரிதமாக செயல்பட்ட ப்ரித்விராஜ்; வைரலான வீடியோ..

குஜராத் மாநிலத்தின் வதோதரா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிகிறது. மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளம் சூழந்த மோர்பி மாவட்டத்தின் கல்யாண்பூர் கிராமத்தில் 17 குழந்தைகள் உட்பட 42 பேர் சிக்கியுள்ளதாக டங்காரா காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த காவல் நிலையத்தச் சேர்ந்த காவலர்களே மீட்புப் பணியைத் தொடங்கினர். தற்காலிக படகு ஒன்றை அவர்கள் அமைத்தனர். ஆனால், வெள்ள அளவு கூடிக்கொண்டே இருந்ததால் அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த ப்ரித்விராஜ் சிங் ஜடேஜா என்ற காவலர் இரண்டு சிறுமிகளை தனது தோள்பட்டையில் சுமதந்தவாறு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து காப்பாற்றினார். அவரது கால்களில் இருந்த காயங்களைப் பொருட்படுத்தாமல் கூட அவர் சிறுமிகளைக் காப்பாற்றினார்.

இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகி காவலர் பிரித்விராஜூக்கு பாராட்டுகள் குவிந்தன.

யோசிக்க நேரமில்லை..

தனது துணிச்சலான துரிதமான நடவடிக்கையால் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவரும் பிரித்விராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "கல்யாண்பூரில் 40 பேர் சிக்கியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்தது. நாங்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தோம். கூட்டாக செயல்பட்டு அனைவரையும் மீட்டோம். வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் நின்று யோசிக்க நேரமில்லை. அதனால், அந்த இரண்டு குழந்தைகளையும் நான் தோளிலேயே சுமந்து சென்றேன். மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் இலக்காக இருந்தது" என்று இயல்பாகக் கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் பாராட்டு:

இதற்கிடையில், காவலர் பிரித்விராஜ் சிங் ஜடேஜாவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) காலை தனது ட்விட்டர் பக்கத்தில், "கான்ஸ்டபிள் பிரத்விராஜ் சிங் ஜடேஜாவின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். மோர்பி மாவட்டத்தின் கல்யாண்பூர் கிராமத்தில் நேற்று இரண்டு பள்ளிக்குழந்தைகளை காவலர் ஜடேஜா சுமார் 1.5 கி.மீ தூரம் தனது தோள்களிலேயே தூக்கிச் சென்று கரை சேர்த்துள்ளார். இப்படியான அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் செயல் பாராட்டுக்குரியது மட்டுமல்ல இது மற்றவர்களுக்கும் முன்னுதாரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x