இடஒதுக்கீட்டு முறை, எஸ்.சி., எஸ்,டி., வன்கொடுமை தடுப்புச் சட்டங்களால்தான் சாதியம் இருக்கிறது: பாஜக எம்எல்ஏ., சர்ச்சைக் கருத்து

இடஒதுக்கீட்டு முறை, எஸ்.சி., எஸ்,டி., வன்கொடுமை தடுப்புச் சட்டங்களால்தான் சாதியம் இருக்கிறது: பாஜக எம்எல்ஏ., சர்ச்சைக் கருத்து
Updated on
1 min read

இடஒதுக்கீட்டு முறை மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டங்களால்தான் சாதியம் இன்னும் இருக்கிறது என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ., சுரேந்திரா சிங்.

சர்ச்சைகளுக்குப் பெயர்போன பாஜக எம்.எல்.ஏ., சுரேந்திரா சிங், "எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பதால்தான் தீண்டாமை இருக்கிறது. இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டால் தீண்டாமை என்பதே இருக்காது. இடஒதுக்கீட்டு முறைதான் சாதியத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நிகழ்ச்சியின்போது அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர்சாதி ஏழைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டமே எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக நீக்கும் பாஜகவின் திட்டம் என்று பல்வேறு கட்சியினரும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ., சுரேந்தர் சிங் கூறியுள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாலியா தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர் இதற்கு முன்னரும்கூட பலமுறை பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, "இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும். அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில் தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் அல்லது சிவாஜி மகால் என்று மாற்ற வேண்டும்" என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in