Published : 12 Aug 2019 12:28 PM
Last Updated : 12 Aug 2019 12:28 PM

காஷ்மீரில் அமைதியாக நடந்த ஈகைத் திருநாள் தொழுகை: போராட்டங்கள் இல்லை; இனிப்புகள் வழங்கி பரஸ்பரம் வாழ்த்து

ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் முஸ்லிம்கள் அமைதியான முறையில் ஈகைத் திருநாள் தொழுகையில் ஈடுபட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதன்முதலாக ஈகைத் திருநாள் இன்று கொண்டாடப்பட்டது.

எந்தவிதமான போராட்டங்கள், அசம்பாவிதங்கள் இன்றி பல்வேறு மசூதிளிலும் தொழுகை அமைதியான முறையில் நடந்தது. மக்கள் இனிப்புகளை வழங்கி, பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை இரு பிரிவாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

ஜம்மு நகரில் உள்ள ஒரு மசூதியில் அமைதியாக நடந்த தொழுகை : படம் ஏஎன்ஐ

ஜம்ம காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், அங்கு தகவல் தொடர்புகள், செல்போன் இணைப்புகள், இணைய சேவை, தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 144 தடை உத்தரவு போடப்பட்டு மக்கள் நடமாடுவதில் கட்டுப்பாடுகளை பாதுகாப்புப் படையினர் விதித்திருந்தனர்

இந்நிலையில் ஈகைத்திருநாளை முன்னிட்டு அந்தக் கட்டுப்பாடுகளை கடந்த சனிக்கிழமை முதல் பாதுகாப்புப் படையினர் தளர்த்தினர். மக்கள் இயல்பாக சாலையில் நடமாடி தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மருந்துகள், உணவுப்பொருட்களைக் கடைகளில் வாங்கினர். மக்கள் தொழுகைக்கும் அருகில் உள்ள மசூதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலைக்குப் பின் மீண்டும் போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்து கட்டுக்குள் கொண்டுவந்தனர. இன்று காலை, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் ஈகைத் திருநாள் தொழுகை மிகவும் அமைதியான முறையில் நடந்தது.

மக்கள் எந்தவிதமான போராட்டமும் இன்றி, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் மசூதிக்கு வருகை தந்து தொழுகை நடத்தினர். தொழுகை நடந்து முடிந்த பின் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பரஸ்பரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

மக்களும், போலீஸ் அதிகாரிகளும் பரஸ்பரம் இனிப்புகளை வழங்கி ஈகை திருநாளைக் கொண்டாடிய காட்சி (படம்விளக்கம்)

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி ஈகைத் திருநாளைக் கொண்டாடினர். மக்களும் அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கி ஈகைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இருப்பினும், காஷ்மீர் பகுதியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால், மக்கள் சிறிது அச்சத்துடனே சாலைகளில் நடமாடியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிய மக்கள் (படம் ஏஎன்ஐ)

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரங்கள் அடிக்கடி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதமான சிறு அசம்பாவித சம்பவங்களும் நேராமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு கெடுபிடியாமல் மகக்ளுககு சிலநேரங்களில் அசவுகரியங்கள் நேரலாம். ஆனாலும் மக்கள் நடமாடுவதிலும், கடைகளுக்குச் சென்று பொருட்களையும், மருந்துகளையும் வாங்குவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. சில உணவுப்பொருட்கள் மக்களின் வீட்டுக்கே கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவந்து, எந்தவிதமான போராட்டங்கள், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதற்கு அரசு அதிகமான முக்கியத்துவம் அளிக்கும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x