Published : 12 Aug 2019 11:49 AM
Last Updated : 12 Aug 2019 11:49 AM

விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள்: அழகிய டூடுளை வெளியிட்ட கூகுள்

இந்திய விண்வெளியியல் துறையின் தந்தையாகப் போற்றப்படும் விஞ்ஞானி விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம், அவருக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

யார் இந்த சாராபாய்?

விக்ரம் சாராபாய் 1919, ஆகஸ்ட் 12 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி. மிகப் பெரிய செல்வந்தர் குடும்பம் இவர்களுடையது. உயர் படிப்பை லண்டனில் முடித்தவர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் சர் சி.வி. ராமனிடம் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். காஸ்மிக் கதிர்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் கண்காணிப்பு மையங்களை அமைத்தார். பெங்களூரு, புனே, இமயமலைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்களில் தாமே உருவாக்கிய கருவிகளைப் பொருத்தினார்.

1957-ம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, இயற்கை வளங்களை ஆராய்வது போன்றவற்றில் மிகப் பெரிய சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார். இவரது அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மையம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு விக்ரம் சாராபாய் தலைமை வகித்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்படுவதற்கு முழுமையான காரணமாக இருந்தார்.

இந்தியாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியாக சாராபாய் இருந்தார். இதன் மூலம் 24 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேருக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இந்திய அணுக்கரு இயலின் தந்தை ஹோமி ஜஹாங்கிர் பாபா மறைந்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராக இருந்து, அதை மேலும் விரிவுபடுத்தினார். அறிவியல் கல்வி குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். அதனால் நாடு முழுவதும் சமூக அறிவியல் மையங்களைத் தோற்றுவித்தார்.

இந்தியர்கள் உயர் கல்வி பெறுவதற்காக அகமதாபாத்தில் இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM) உருவாக்கினார். கடினமான உழைப்பாளி. மிக உயரிய பதவிகளில் இருந்தாலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். எல்லோரையும் புன்னகையுடன் வரவேற்பார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று தூக்கத்தில் உயிர் துறந்தார். 1974-ம் ஆண்டு சிட்னியில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியம், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்துக்கு விக்ரம் சாராபாயின் பெயரைச் சூட்டியது. 1966-ல் பத்மபூஷண் விருதும், 1972-ல் பத்ம விபூஷண் விருதும் அவரைச் சிறப்பித்தன.

சாராபாயின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுளை மும்பையைச் சேர்ந்த பவன் ராஜூர்கர் என்னும் கலைஞர் உருவாக்கியுள்ளார். அழகிய நீல நிறத்தில் விக்ரம் சாராபாயின் ஓவியத்தோடு, நிலவு, செயற்கைக்கோள் ஆகியவை டூடுளை அலங்கரிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x