தென்மேற்கு பருவமழை தாக்கம்: கேரளாவில் 78, கர்நாடகாவில் 40 பேர் பலி

தென்மேற்கு பருவமழை தாக்கம்: கேரளாவில் 78, கர்நாடகாவில் 40 பேர் பலி
Updated on
2 min read

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அந்தந்த மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் 40 பேர் பலி:

கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்றுவரை மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 40 பேர் பலியானதாக கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 14 பேர் மாயமானதாகவும் 5 லட்சத்து 81 ஆயிரத்து 702 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு 17 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 1168 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் கர்நாடகாவில் 2028 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள நிலவரம்:

கேரளாவில் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி கடந்த ஆகஸ்ட் 8 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் 72 பேர் பலியானதாகவும் 58 பேரை காணவில்லை என்றும் கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளனதன் காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 8 முதல் 11 வரையிலான காலகட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 72 பேர் பலியானதாகவும் 58 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கேரளாவில் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிவரை கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் வேண்டுகோள்:

இதற்கிடையில், வயநாடு தொகுதி எம்.பி.,யான ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், எனது வயநாடு தொகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடற்று நிற்கின்றனர். பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர். இந்நிலையில், மக்கள் தண்ணீர் பாட்டில்கள், பாய், போர்வை, சானிட்டரி நேப்கின்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், அரிசி, சர்க்கரை, காய்கறை ஆகியனவற்றை மலப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in