

புதுடெல்லி
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் நெருங்கிய உறவினர் ரதுல்புரியின் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்தை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது விவிஜபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறு வனத்துடன் மத்திய அரசு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண் டது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியாவை சேர்ந்த சிலருக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறு வனம் ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த முறைகேட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான கமல்நாத்தின் நெருங்கிய உறவினர் ரதுல் புரிக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் குற்றம்சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
கைது வாரன்ட்
புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின்பேரில் ரதுல் புரியின் ரூ.254 கோடி மதிப்புள்ள பினாமி பங்குகளை வருமான வரித் துறை கடந்த மாத இறுதியில் முடக்கியது.
இதனிடையே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ரதுல் புரியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்ய மனுக் களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், புலனாய்வு அமைப்புகள் பரிந்துரையின்பேரில் டெல்லியில் உள்ள ரதுல் புரியின் நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு மாளிகையை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இந்த சொகுசு மாளிகையின் மதிப்பு ரூ.300 கோடியாகும். பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டெல்லி சொகுசு மாளிகை முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தப்பியோட்டம்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ரதுல் புரியிடம் விசாரணை நடத்தப் பட்டது. அன்றைய தினம் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் கழிப்பறை சென்று வருவதாகக் கூறிய ரதுல் புரி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவரை கைது செய்யாவிட்டால் ஆவணங் களையும், சாட்சிகளையும் அழித்து விடுவார் என்று சிபிஐயும், அமலாக்கத் துறையும் குற்றம் சாட்டியுள்ளன.