

நாடு முழுவதும் இன்று (திங்கள்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முஸ்லிம் மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "நாட்டின் சக குடிமக்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துகள். குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். ஈகைத் திருநாள் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயத்துக்கான அடையாளம். இந்நாளில் நாம் அனைவரும் இந்த நன் மதிப்புகளைக் கடைபிடிக்க உறுதியேற்போம்" என ட்விட்டரில் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது வாழ்த்துக் குறிப்பில், "ஈகைத் திருநாளின் உன்னத நோக்கங்கள் நம் வாழ்வில் அமைதியையும் ஒற்றுமையை கொண்டுவரட்டும். தேசத்துக்கு வளம் சேர்க்கட்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், "பக்ரீத் பண்டிகையை ஒட்டி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பண்டிகை அமைதியையும், மகிழ்ச்சியையும் மேலோங்கச் செய்யும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதுதவிர அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் சிறப்பு தொழுகை..
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இன்று காலை ஸ்ரீநகரின் பொஹல்லா மசூதியில் முஸ்லிம் மக்கள் ஈத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும்கூட பெரியளவில் கூட்டங்கள்கூட கெடுபிடி நிலவுகிறது. போக்குவரத்திலும் கெடுபிடி நிலவுகிறது.