Published : 11 Aug 2019 05:54 PM
Last Updated : 11 Aug 2019 05:54 PM

மம்தா கட்சிக்கு சோதனை: மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர்கள் திணறல்: ஊழல், கமிஷன் எதிரொலி

கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், மக்களை நேரடியாகச் சந்தித்து கருத்துக்களைக் கேட்ட தலைவர்கள், அமைச்சர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜி அரசில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள், கட் மணி எனப்படும் கமிஷன் பெறுவது போன்றவை குறித்து மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர்களும், தலைவர்களும் திணறியுள்ளார்கள். இப்போதுள்ள நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்வது கடினமானது என்று அந்த கட்சியினர் வேதனைப்படுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் 30 இடங்களுக்கு மேல் எதி்ர்பார்த்த நிலையில் 22 இடங்களை மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் கட்சி வென்றது. இது அந்த கட்சியியினருக்கு பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

2021-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நிச்சயம் இது உதவாது என்று அந்த கட்சியின் தலைமை முடிவு செய்துது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை திரிணமூல் காங்கிரஸ் கட்சி நியமித்து அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறது.

பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் என ஆயிரம் தலைவர்களைத் தேர்வு செய்து, ஆயிரம் 10 ஆயிரம் கிராமங்களில் அடுத்த 100 நாட்களை செலவிட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அந்த மக்களிடம் உரையாடுவது, அவர்களின் குறைகளைக் கேட்பது, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது, கட்சியைப் பற்றியும், அரசைப்பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இந்த திட்டம் உதவும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த 100 நாட்கள் திட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ரபிந்திரநாத் கோஷ், ஜோதிபிரியோ முல்லிக், அப்துல் ரஸாக் முல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், " நான் சென்ற கிராமங்களில் மக்கள் அரசைப் பற்றி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். ஆனால், சில கிராமங்களில் அரசின் ஊழல் குறித்தும், கட்மணி எனப்படும் கட்சியினர் பணிகளைச் செய்ய கமிஷன் பெறுவதையும், மக்களிடம் அடாவடி செய்யும் உள்ளூர் தலைவர்கள் குறித்து கடுமையாக கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்ற கேள்விகளுக்கு நிச்சயம் எங்களால் பதில் அளிக்க முடியவில்லை " எனத் தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், " கட்சியில் இருந்து ஊழல் செய்த, அகங்காரம் பிடித்த தலைவர்களை ஏன் விலக்குவதில்லை என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். மக்களின் கேள்விகளையும், எண்ணங்களையும் கட்சித் தலைமையிடம் ஒப்படைப்போம் " எனத் தெரிவித்தார்.

நார்த் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பான்கோர் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் முசாபர் அகமது இல்லத்தில் நேற்றுஇரவு அமைச்சர் முல்லா தங்கினார். அவர் கூறுகையில், " மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறோம். மக்களிடம் இழந்த நம்பிக்கையைப் மீண்டும் பெறுவோம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் பெருத்த அடி வாங்கியபின் கட்சித் தலைவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்த தலைவர் மம்தா பானர்ஜி, கடுமையாக சாடியுள்ளார். மக்களுக்கு எந்தமாதிரியான நலத்திட்டங்கள் செய்திருந்தாலும், ஊழல், கமிஷன் பெறுதல் போன்றவை மக்களிடம் நல்ல பெயரை கட்சிக்கும், ஆட்சிக்கும் குலைத்துவிடும் என்று மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
மாறாக மாநிலத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சியாக உருமாறி வருவதால், அதற்குபோட்டியாக இருக்க வேண்டும் என்பதால், தொழி்ல்முறையிலான உதவியை திரிணமூல் காங்கிரஸ் நாடியுள்ளது. மக்கள் நேரடியாக குறைகளைத் தெரிவிக்க சமீபத்தில் மம்தா பானர்ஜி, 9137091370 எனும் உதவி எண்ணையும், www.didikebolo.com என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x