கேரள பெருமழை: 2 கிராமங்கள் புதையுண்ட துயரம்: 12 அடிக்கு சேறு; கண்ணீருடன் தேடும் மக்கள், 50க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்தனரா?

கவலப்பாராவில் மண்சரிவு ஏற்பட்ட இடம் :  படம் ஏஎன்ஐ
கவலப்பாராவில் மண்சரிவு ஏற்பட்ட இடம் : படம் ஏஎன்ஐ
Updated on
3 min read

புதுமலா

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பெருமழையால், இரு கிராமங்களே நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட துயரம் நடந்துள்ளது.

12 அடிக்கு சேறும், சகதியும் நிரம்பி இருப்பதால், மீட்புப்படையினர் உள்ளே இறங்கவே அச்சப்படுகிறார்கள். 50-க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா, வயநாட்டில் உள்ள புதுமலா ஆகிய இரு கிராமங்கள்தான் கடந்த 8-ம் தேதி பெருமழையில் மண்ணில் புதையுண்டன. ஏறக்குறைய 3 நாட்களாக பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மண்ணில் புதையுண்டவர்களை பேரிடர் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.

கவலப்பாராவில் மண் சரிவு ஏற்பட்ட இடம்(படவிளக்கம்)

இந்த நிலச்சரிவில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் கண்ணீருடன் தேடி வருகின்றனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கேரளாவில் கடந்த 4 நாட்களாக பெய்த இடைவிடாத கனமழையால் கடந்த ஆண்டைப் போல் பல்வேறு மாவட்டங்கள் மழைவெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

35 குடும்பங்கள்

இதில் கடந்த 8-ம் தேதி இரவு பெய்த மழையில் இரு துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தன. மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கவலப்பாரா என்ற மலைக்கிராமம் இருந்தது. 10 ஏக்கர் பரப்பளவில் 35 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த 8-ம்தேதி இரவு பெய்த மழையில் திடீரென மலையில் இருந்த ஒட்டுமொத்த மண்ணும் சரிந்து இந்த கிராமத்தை வாரிச்சுருட்டிக்கொண்டது.

இப்போது பார்த்தால் சிவப்பு நிறத்தில் ஏதோ பொட்டல் காட்டைப் பார்ப்பதுபோன்று கிராமமே காணாமல் போய்விட்டது. 10 ஏக்கர் பரப்பளவில் இருந்த தென்னை, பாக்குமரங்கள் அனைத்தும் மண்ணில் புதையுண்டு ஆங்காங்கே கழுத்தை நீட்டிக்கொண்டு வெளியே தெரிகின்றன.

ஏறக்குறைய 35 வீடுகளில் இரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்த குழந்தைகள், பெண்கள், முதியோர், ஆண்கள் என 65க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிரோடு புதையுண்டுள்ளனர்.

12 அடிக்கு சேறு

இந்த சம்பவம் குறித்து கவலப்பாராவில் மண்சரிவில் உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், " 40 குடும்பங்கள் வரை கவலப்பாராவில் வசித்தோம். சிறுகுழந்தைகள் விளையாடுவதும், சிரிப்பதும், பெண்கள் சத்தமிடுவதும் எனப் பார்க்கவே இந்த இடம் ரம்மியமாக இருந்தது. ஆனால் 8-ம் தேதி இரவு பெய்த பேய் மழையில் ஒரு மேகக்கூட்டம் மூடுவதைப் போல் பெரிய மண் சரிந்து வந்து எங்கள் கிராமத்தை கபளீகரம் செய்துவிட்டது.

60-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. எங்கள் வீட்டில் இருந்த ஒரு பெண் தன்னுடைய தூங்கும் குழந்தையை தூக்கி வருவதாகக் கூறிச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.

இந்த இடத்தில் இருந்து இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.12 அடிஆழத்துக்கு சேறும், சகதியும் நிரம்பி இருக்கிறது. உறவினர்களை தேடி வருகிறோம். இந்த இடமே இப்போது மிகப்பெரிய சுடுகாடு போன்று காட்சியளிக்கிறது. மண்ணுக்குள் புதையுண்டவர்கள் மீண்டுவருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தேடுகிறோம் " எனத் தெரிவித்தார்.

மிகப்பெரிய சத்தம்

தனது குடும்பத்தில் 8 பேரை இழந்த சுனில் என்பவர் கண்ணீருடன் கூறுகையில், " நான் மலை அடிவாரத்தில் இருந்தேன். இரவுநேரத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டது கண் இமைக்கும் நேரத்தில் மிகப்பெரிய மண்குவியல் எங்கள் மீது மோதியது. இதில் நானும் எனது மகள் மட்டுமே தப்பித்தோம். எனது குடும்பத்தில் உள்ள 8 பேரை காணவில்லை, மண்சரிவு ஏற்பட்டபோது கேட்ட சத்தம் என்காதுகளைவிட்டு அகலவில்லை" எனத் தெரிவித்தார்.

புதுமலா

இதேபோல வயநாடு மாவட்டம், கல்பேட்டாவில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள புதுமலா கிராமமும் மண்ணில் புதையுண்டது. வாழை, காபி, தேயிலை என விவசாயம் செய்து செழிப்புடன் வாழ்ந்த மக்களை ஒரே நாள் இரவில் ஏற்பட்ட மண்சரிவு மக்களையும், அவர்களின் உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் சுவாகித்துக் கொண்டது

இந்தப் பகுதியல் இருந்த மசூதி, கோயில், வீடுகள், வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் பூமியின் பசிக்கு இரையாகிவிட்டன. கடந்த 8-ம் தேதி பெய்த பெருமழையில் காணாமல்போன கிராமத்தில் புதுமலாவும் ஒன்றுதான். இந்த கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை இந்த மண்சரிவில் இருந்து இதுவரை 10 உடல்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளார்கள்.

தொடர்ந்து பெய்துவரும் மழையால் சேற்றுப்பகுதியில் காலை வைக்க முடியாமல் மீட்புப்படையினர் தடுமாறி வருகிறார்கள். இதனால் மீட்புப்பணியிலும் லேசான தொய்வு ஏற்பட்டுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர், பொதுமக்கள் அனைவரும் உயிருடன் யாரையாவது மீட்டுவிடமாட்டோமோ என்ற ஆதங்கத்துடன் தேடி வருகின்றனர்.

ஆனால் 3 நாட்கள் ஆகியும் இன்னும் எந்தவிதமான அழுகுரலும் மண்ணுக்குள் இருந்து கேட்காததுதான் நம்பிக்கை இழக்க வைத்துள்ளது.


பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in