

வதோதரா
குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை பிரித்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தனது தோள்பட்டையில் சுமதந்தவாறு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்த காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிஹார், காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வதோதரா நகரில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் பெரும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குஜராத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. கட்டப்பட்டதில் இருந்து சர்தார் சரோவர் அணை முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுகும் பணியில் போலீஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், மோர்பி மாவட்டத்தில் கலையன்பார் கிராமத்தை வெள்ளம் சூழந்துள்ளது. தனித்தீவாக மாறி விட்ட அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மார்பளவு வெள்ளத்தில் பயணம் செய்ய வேண்டய நிலை உள்ளது. படகுகள் வந்து சேர சற்று காலதாமதமான நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட பிரித்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தனது தோள்பட்டையில் இரண்டு சிறுமிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வந்து காப்பற்றியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பாது வைரலாகி வருகிறது.
அந்த காவலருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.