Published : 11 Aug 2019 12:54 PM
Last Updated : 11 Aug 2019 12:54 PM

போதையில் தடுமாறும் இமாச்சலப் பிரதேச கிராமம்: கஞ்சா செடிகளை வேரோடு அகற்றக் களமிறங்கிய பெண்கள்

ராம்பூர் புஷார் (இமாச்சல பிரதேசம்)

இமாச்சலப் பிரதேசத்தின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண்கள், போதைப் பொருள் அச்சுறுத்ததைத் தடுப்பதற்காக உள்ளூரில் விளைந்த கஞ்சா செடிகளை அழிக்கும் பணியில் ஒன்று சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் டகோலாட் கிராமத்தில் எங்குபார்த்தாலும் கஞ்சா செடிகள் விளைந்து கிடக்கின்றன. இதனால் கிராமத்து இளைஞர்கள் பலரும் தினமும் போதையிலேயே இருப்பார்கள். இதற்கு ஒரு முடிவு கட்டவே 'மகிளா மண்டல்' என்ற கிராம பெண்கள் அமைப்பு உதயமானது.

இதன்மூலம் போதைத் தடுப்பு பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அவர்கள் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிராமத்தில் உள்ள பெண்களிடம் அந்த செடிகள் அவர்கள் தோட்டத்தில் இருந்தால் அதை வேரோடு பிடுங்கி எறியும்படி இந்த 'மகிளா மண்டல்' அமைப்புக்குழு பல இடங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வலியுறுத்தி வருகிறது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நிறைய பெண்கள் சாலை ஓரங்களிலும் வீட்டுப் பின்புறம் உள்ள தோட்டங்களிலும் அது மட்டுமின்றி விவசாய நிலங்களிலும் விளைந்து கிடக்கும் கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கியெறிவதையும் செய்து வருகிறார்கள்.

இப் பிரச்சாரத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் தெரிவிக்கையில், ''எங்கள் பகுதியில் காணப்படும் கஞ்சாவை எங்கள் கிராம இளைஞர்கள் உட்கொள்கிறார்கள். அது கிராமம் எங்கும் பல இடங்களிலும் விளைந்து கிடப்பதால் அவர்கள் மிகவும் எளிதாக போதைக்காக அதை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

அதைத் தடுப்பதற்காகத்தான் பாங் உகாடோ (பிடுங்கப்பட்ட கஞ்சா) என்ற திட்டத்தை எங்கள் மகிளா மண்டல் என்ற பெண்கள் அமைப்பு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் இனிமேல் இளைஞர்கள் அந்த செடிகள் அவர்கள் கைகளுக்கு கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்'' என்றார்.

இதுகுறித்து டகோலாட் கிராமத்தில் இயங்கிவரும் மகிளா மண்டலின் தலைவர் அஞ்சலி தெரிவிக்கையில், ''கஞ்சா செடிகளை வேரோடு அகற்றி இப்பகுதியை கஞ்சா இல்லாத ஊராக மாற்றவே இன்று நாங்கள் அனைவரும் கூடியிருக்கிறோம். அதுமட்டுமின்றி இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பாழக்கிக் கொள்ளக்
கூடாது என்பதோடு நாட்டின் வளர்ச்சியிலும் அவர்கள் தீவிரமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவும் இதை செய்து வருகிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x