

திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் அதிகமான பாதிப்புக்கு உள்ளான வயநாடு பகுதியை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று வயநாட்டுக்கு வருகிறார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
மலப்புரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி : படம் ஏஎன்ஐ
மழையால் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகிய கோழிக்கோடு, ஆழப்புழா மாவட்டங்களில் இன்று காலை இரு உடல்கள் மீட்கப்பட்டன. மலப்புரத்தில் உள்ள புதுமலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருக்கிறார்கள் என்பதால் அங்கு தேடுதல் பணியில் மீட்டுப்பணியினர் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தில் வெள்ளச்சூழல், மழை நிலவரம், மீட்புப்பணி ஆகியவை குறித்து முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விவரங்களைக் கேட்டறிந்தார்.
வயநாட்டில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள காட்சி: படம் ஏஎன்ஐ
இதுவரை மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த 1.65 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு, 1,318 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதியை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா வருகிறார். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வெள்ளத்தால்ப பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட உள்ளார்.
நிலம்பூர், மாம்பாட், எடவனப்பாரா ஆகிய நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை ராகுல் காந்தி சந்தித்து குறைகளைக் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
கடந்த 3 நாட்களாக மழை காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சி சர்வதேச விமானநிலையம் இன்று பிறப்பகலுக்கு பின் தனது சேவையைத் தொடர உள்ளது.
வயநாட்டில் உள்ள பானாசுரா அணை நிரம்பியதால் அணை திறக்கப்படுவதை வேடிக்கை பார்த்த மக்கள்: படம் ஏஎன்ஐ
மாநிலத்தில் பல்வேறு இடங்களில் செல்லும் ரயில்பாதைகளில் மழை நீர் தேங்கி இருப்பதாலும், ரயில்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும் இன்று 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மங்களூரு-திருவனந்தபுரம், மாவேலி எக்ஸ்பிரஸ், மலபார் எக்ஸ்பிரஸ், கண்ணூர்-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இரு ரயி்ல்கள் வேறு மார்க்கவும்,7 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன.
பிடிஐ