

சண்டிகர்:
ஜாகுவார் சொகுசு காருக்குப் பதிலாக தந்தை வாங்கித் தந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை கோபத்தில் ஆற்றில் அவரது மகன் தள்ளியுள்ள சம்பவம் ஹரியாணாவில் நடந்துள்ளது.
ஹரியாணா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொழிலதிபராக உள்ள தனது தந்தையிடம் ஜாகுவார் சொகுசு காரை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரோ தனது மகனுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கார் அவரது மகனுக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் கோபமடைந்த மகன், தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் அந்தக் காரை ஆற்றில் நேற்று முன்தினம் தள்ளிவிட்டுள்ளார். மேலும் கார் தள்ளிவிடப்படும் காட்சியை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதனிடையே ஆற்றில் இறங்கிய அந்த சொகுசு காரானது ஓரங்களில் இருந்த புல் புதரில் சிக்கிக்கொண்டது. பின்னர் அங்கிருந்த உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்தக் காரை மீட்க அவர் முயற்சி செய்தார். தகவல் அறிந்த போலீஸார் அந்த மகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சொகுசு காரை, உள்ளூர் நீச்சல் நிபுணர்கள், கிரேன் உதவியுடன் போலீஸார் மீட்டனர்.
சம்பந்தப்பட்ட தொழிலதிபர், அவரது மகன், சொகுசு காரின் விலை ஆகிய விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் அந்த வீடியோ மட்டும் வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.