Published : 09 Jul 2015 06:47 PM
Last Updated : 09 Jul 2015 06:47 PM

பாரபட்சமான தடைகள் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கின்றன: பிரதமர் மோடி

உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடையை சுட்டிக்காட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஒருதலைப் பட்சமான பொருளாதாரத் தடைகள் உலக பொருளாதாரத்தையே பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அதிபர் புடினைச் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஒருதலைப் பட்சமான பொருளாதார தடைவிதிப்புகள் உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கச் செய்கிறது. எனவே பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தங்களிடையே உறவுகளை ஆழப்படுத்திக் கொள்வது அவசியம். மேலும் மற்ற வளர்ந்த பகுதிகளுடனும் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

இது, அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் உக்ரைன் நெருக்கடி காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடையை விமர்சிப்பதாக அமைந்தது.

மோடி உரையாற்றும் போது, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா ஆகியோர் இருந்தனர்.

“உலகப் பொருளாதாரம் தற்போது வலுவாக இல்லை. வளர்ந்த பொருளாதாரமான ஐரோப்பாவே நெருக்கடியில் உள்ளது, நிதிச்சந்தைகள் நிலையின்மையில் தத்தளிக்கின்றன” என்றார் மோடி.

உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகளில் மட்டும் 44% மக்கள் வசிக்கின்றனர். உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் பிரிக்ஸ் பங்களிப்பு மட்டும் 40% ஆகும். உலக வர்த்தகத்தில் 18% பங்களிப்பு செய்து வருகிறோம் என்று கூறிய மோடி, “பிரிக்ஸ் நாடுகளிடையே வேளாண்மை, உற்பத்தி, தொழில்நுட்பம், சேவை, மனித வளங்கள் என்ற அளவில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எனவே நம்மிடையே பொருளாதார கூட்டுறவு என்பதே செலுத்தும் சக்தியாக உள்ளது.

நாம் நமது திறன் வளர்ச்சியை இன்னமும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

புதிய வளர்ச்சி வங்கி இந்த 5 நாடுகளிடையே எல்லை தாண்டிய கூட்டுறவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறிய மோடி, “உறுப்பு நாடுகள் செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளிலிருந்து பயனடையும் என்றே கருதுகிறேன். பெரிய திட்டங்களுக்கான பிரிக்ஸ் முயற்சி ஒரு வரவேற்கத்தக்க முதல் படி” என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x