

புதுடெல்லி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு கிடைத்த வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மீது உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் கருத்து கூறியுள்ளார். இதில், காஷ்மீரிகளுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் இர்பான் ஹபீப் (87), அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர். மத நம்பிக்கை இன்றி, இடதுசாரிச் சிந்தனையாளரான ஹபீப், அதேதுறையின் தகைசால் (Emeritus) பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
கடந்த திங்கள்கிழமை மத்திய அரசால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவுகளான 370, 35-ஏ ரத்து செய்யப்பட்டது குறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறியதாவது:
''காஷ்மீரிகளிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுத்த முடிவு ஜம்மு-காஷ்மீர்வாசிகளை மயக்கமடையச் செய்யும் செயலாகும். காஷ்மீரின் மகாராஜாவான ஹரி சிங்கைப் போற்றுவதில் பாஜக என்றைக்குமே ஓய்ந்ததில்லை. அந்தக் காலங்களில் ஹரி சிங், ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க விரும்பாமல் தன்னாட்சி உரிமை கொண்ட சட்டப்பேரவையைக் கேட்டுப் பெற்றார்.
எனவே, நாட்டின் இதர மாநிலங்களைப் போல் மாற்ற விரும்பி மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்குவதற்கான கேள்வியே எழவில்லை. சிறப்பு அந்தஸ்து அளிப்பது என்பது ஒரு நியாயமான காரணம் என அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் அதை ஏற்றிருந்தார்.
சங் பரிவாரத்தினர் அப்போது காஷ்மீர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். சங் பரிவார உறுப்பினர்கள் காஷ்மீர் முஸ்லிம்களைத் தாக்கியதுடன் அவர்களது நிலங்களையும் பறிக்க முயன்றனர். இதுபோன்ற செயலில் இருந்து வெளியாட்களைத் தடுக்கவும், காஷ்மீர் முஸ்லிம்களைப் பாதுகாக்கவுமே அப்போது வல்லபாய் படேல் அம்மாநிலத்தில் நுழைய அனுமதி பெறும் முறையைக் கொண்டுவந்தார்.
இன்றும் நாட்டின் அனைவரும் காஷ்மீரில் நுழைவது எளிதாக உள்ளது. ஆனால், இன்று பாஜக எனப் பெயர் மாறிய கட்சியான ஜனசங்கம் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களின் நோக்கம் தவறானது என்பதால் அன்று அவர்களுக்கு காஷ்மீரில் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.
நாடு பிரிவினையின் போது காஷ்மீரிகள் பாகிஸ்தானுடன் சென்றுவிடாமல் தடுக்கவே அவர்களுக்கு நிலம், அரசுப் பணி மற்றும் உதவித்தொகைகளில் 35-ஏ மூலம் சிறப்பு உரிமை 1954-ல் அளிக்கப்பட்டது. இந்த 35-ஏ பிரிவால் தம் மாநிலத்தை விட்டுச் சென்ற காஷ்மீரிகள் திரும்பி வந்தனர்.
370, 35-ஏ ஆகிய இரண்டும் காஷ்மீர்வாசிகளுடன் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் அமலாக்கப்பட்டது. இன்று அவை அவர்களது ஆலோசனைகள் பெறாமலேயே வாபஸ் பெறப்பட்டுள்ளது. அன்று ஜம்மு-காஷ்மீரில் நிலவிய வேளாண் கொள்கை நாட்டின் சிறந்ததாகக் கருதப்பட்டது. இதற்கு அப்போது விவசாயிகளுக்கு விவசாய நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டது காரணம்.
தற்போது ரத்து செய்யப்பட்ட பிரிவுகளை நீக்க, ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், சிலரது தவறான யோசனைகளினால் மத்திய அரசு எடுத்த முடிவால் ஜம்மு-காஷ்மீர் புறக்கணிக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு இர்பான் ஹபீப் தெரிவித்தார்.
- ஆர்.ஷபிமுன்னா