

பூகம்பங்களை முன் கூட்டியே கணிக்கும் லட்சிய திட்டத்துக்காக 27 நாடுகளின் புவிபவுதிக அறிவியலாளர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள் ஆகியோருடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது.
தொடக்கத்தில் பூகம்பம் ஏற்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன்பாகக் கணித்து எச்சரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல், நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிக்க செயற்கைக் கோள் ஒன்றையும் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ஷைலேஷ் நாயக் கூறும்போது, “இந்த முயற்சி வெற்றி அடைந்தால், பூகம்ப கணிப்பு மாதிரி ஒன்று உருவாக்கப் பட்டுவிட்டால், பூகம்பங்களினால் ஏற்படும் மனித உயிரிழப்பை ஓரளவுக்கு தடுத்து விடமுடியும்.
நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பூமியின் அடியில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன, ;பூமியின் மேற்பரப்பில் சில பவுதீக இடமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனை சரியாக கண்டுணர்ந்து ஆய்வு செய்து மாடல் ஒன்றை உருவாக்கினால் பூகம்பங்கள் வருவதற்கு சிறிது நேரம் முன்னால் கணிப்பது சாத்தியமாகும்.
இதற்காக நாம் 2019-ம் ஆண்டு வாக்கில் செயற்கைக் கோள் ஒன்றை செலுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் வரும் காலங்களில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் உணர்திறன் அமைப்புகள் வைக்கப்படவுள்ளன. இதன் மூலம் ரசாயன மாற்றங்கள், பவுதீக மாற்றங்கள் கணிக்கப்படும்” என்று கொல்கத்தாவில் 'நிலநடுக்க பேரழிவை எதிர்கொள்ளல்' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் நாயக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கொய்னா நதிப் பள்ளத்தாக்கில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் 22 மாநிலங்கள் பல்வேறு அளவுகள் கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் கொண்டுள்ளன. இதனால் கட்டிடங்கள் கட்டுமானத்தில் பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.